DMK TVK: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். இவர் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றியதிலிருந்தே அதற்கான ஆதரவு யாரும் எதிர்பாராத வகையில் உள்ளது. அதிலும் முக்கியமாக இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாக்குகளே அதிகளவில் உள்ள நிலையில் விஜய் ஏற்கனவே அதனை கவர்ந்து விட்டார் என்றும் தான் சொல்ல வேண்டும். விஜய் திமுகவை அரசியல் எதிரி என்று கூறியதால், இந்த வாக்குகள் எல்லாம் திமுகவிற்கு எதிராக அமைந்துவிட்டது. இந்நிலையில் மக்களை சந்திக்கும் பணியை மேற்கொண்ட விஜய், 5 இடங்களில் அதனை சிறப்பாக செய்து முடித்தார்.
ஆனால் ஆறாவதாக கரூரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சோகம் நாட்டையே உலுக்கியது. இதன் பின்னர், சுமார் 1 மாதம் கழித்து தவெக சார்பில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இவ்வாறு தொடர்ச்சியாக தவெக தனது தேர்தல் பணியில் வேகமெடுத்துள்ள நிலையில், இன்று புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விஜய் அவர்கள் சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே உரையாற்றியுள்ளார். அதிலும் அரசியல் சார்ந்த, ஆணித்தனமான கருத்துக்கள் எதுவும் இல்லை.
புதுச்சேரியில், திமுக அரசை பற்றி விமர்சிக்க மாட்டார் என்று செய்திகள் பரவிய நிலையில், அதனை விஜய் துடைத்தெறிந்துள்ளார். அவர் தமிழகத்தை தவிர்த்து புதுச்சேரி சென்று பொதுக்கூட்டம் நடத்தியது திமுகவை விமர்சித்து, தமிழகத்தில் நடந்த எந்த ஒரு அசம்பாவிதமும் இங்கு நடக்கவில்லை. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும், காவல் துறையினரும் நல்ல ஒத்துழைப்பு வழங்கினார்கள். ஆகவே கரூர் சம்பவத்திற்கு முழுக்க முழுக்க திமுக அரசு தான் காரணம் என்பதை நிரூபிக்க பொதுக்கூட்டம் நடத்தியது போல தெரிகிறது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த போன்றோரும் இதனை மையப்படுத்தி பேசியது குறிப்பிடத்தக்கது.

