ADMK TVK: 2026 தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில் முக்கியமானதாக பார்க்கப்படுவது விஜய்யின் அரசியல் பிரவேசம். விஜய் தனது முதல் மாநாட்டிலேயே திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி என்று கூறிவிட்டார். மேலும் நான் தான் முதல்வர் வேட்பாளர், தவெக தலைமையில் தான் கூட்டணி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு போன்ற எல்லாவற்றையும் மக்களிடம் தெரிவித்து விட்டார். இதனால் விஜய் கட்சியில் இணைய பல கட்சிகள் ஆர்வம் காட்டி வந்தன. இன்னும் சிலர் அவரை பகடைக்காயாக பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் எந்த கட்சியும் இணைந்த பாடில்லை. இந்நிலையில் தான் தவெகவிற்கு ஜாக்பாட் அடித்ததை போல 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். இவர் கோபி செட்டிபாளையத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நபர் என்பதால் இது அதிமுகவிற்கு பாதகமாக அமைந்துள்ளது என பலரும் கூறினர். இவ்வாறான நிலையில் செங்கோட்டையனின் அண்ணன் மகன் கே.கே.செல்வன் திமுகவில் அங்கம் வகித்த நிலையில், அதிலிருந்து நீக்கப்பட்டு இன்று அதிமுகவில் இணைந்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், செங்கோட்டையன், இரண்டரை கோடி தொண்டர்களுக்கு துரோகம் செய்து விட்டார். ஈரோடு மாவட்டத்தில் அதிமுக வளர்வதற்கு எங்கள் குடும்பம் முக்கிய காரணமாக இருந்தது. நாங்கள் இல்லாவிட்டால் செங்கோட்டையன் தோற்கடிக்கப்பட்டிருப்பார் என்றும் கூறியுள்ளார். மேலும், இத்தனை நாட்கள் அதிமுகவில் இருந்து விட்டு இன்று, புதிதாக கட்சியில் இணைந்த உடன் எடப்பாடியார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருவது மிகவும் தவறானது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

