ADMK: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் மத்திய அரசு கொண்டு வந்த SIR பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கூட்டணி வியூகங்களும் வலுப்பெற்று வரும் நிலையில், அதிமுக உடன் பாஜக, தமாகா போன்ற கட்சிகளும், திமுக உடன் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும் பயணித்து வருகின்றன. திமுகவின் கூட்டணி கட்சிகளிடையே பல்வேறு முரண்பாடுகள் வெடித்து வருவதால், அந்த கூட்டணி எப்போது வேண்டுமானாலும் பிரியும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் அதிமுகவில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்து வருவதை கண் கூடாக பார்க்க முடிகிறது. முதலில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் போன்றோரை கட்சியிலிருந்து நீக்கிய இபிஎஸ் அண்மையில் செங்கோட்டையனையும் நீக்கினார். இவர் தவெகவில் இணைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும், இல்லையென்றால் வேறுமாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரும் என அதிமுக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஓபிஎஸ் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையில் தான் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற இருக்கிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் கூட்டணி வியூகம் குறித்தும், ஆட்சி பங்கு பற்றியும், விவாதிக்கப்படும் என்று கணிக்கப்படுகிறது. மேலும் ஓபிஎஸ் அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பு குறித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும் என கூறியிருப்பதால், அது குறித்து இபிஎஸ் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

