NTK: தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில் முதன்மையானது நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியை ஆரம்பித்தது தான். இதன் தாக்கம் 2026 தேர்தலில் பெரியளவில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. அந்த தாக்கத்திற்கான பணியை தவெக தொடங்கி விட்டது. கரூர் சம்பவத்திற்கு பின் நேற்று புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தி, தமிழக அரசு சரியில்லை என்பதை விஜய் நிரூபித்துள்ளார். விஜய்யின் பிரச்சார வாகனம் பனையூரில் இருந்து வெளியில் வந்தால் கூட அது மிகப்பெரிய செய்தியாக மாறி வருகிறது.
இவ்வாறு புதிய கட்சியான தவெகவின் எழுச்சி அதிகளவில் உள்ள நிலையில், மதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட மல்லை சத்யா திராவிட வெற்றிக் கழகம் என்னும் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். விஜய்யின் அரசியல் வருகையிலிருந்தே மீள முடியாமல் தவிக்கும் தேர்தல் களம், மல்லை சத்யாவின் வருகையையும் எதிர் கொண்டது. இவ்வாறான நிலையில் தான் நாதகவிலிருந்து பிரிந்த ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கண். இளங்கோ “ மேதகு நாம் தமிழர் கட்சி ” என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
இந்த கட்சியில் அவரது ஆதரவாளர்களும் இணைந்துள்ளனர். நாதகவின் முக்கிய நோக்கம் திராவிட கட்சிகளுக்கு எதிராக செயல்படுவது தான். ஆனால் சமீப காலமாகவே சீமான் அதனை எதிர்ப்பதாக தெரியவில்லை. மேலும் மேடைகளில் ஒருவரை விமர்சிப்பதால் மட்டுமே ஆட்சியை பிடித்து விடலாம் என நாதக தலைமை நினைக்கிறது. மற்றபடி களத்தில் இறங்கி வேலை செய்வதாக தெரியவில்லை என்று கண். இளங்கோ குற்றம் சாட்டியுள்ளார். இவர்களின் இந்த பிரிவால், ராமநாதபுரம் மாவட்டத்தில் நாதகவின் செல்வாக்கு குறிப்பிட்ட அளவு சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

