
ADMK: தமிழகத்தில் மிகப்பெரிய திராவிட கட்சியான அதிமுக ஜெயலலிதா மறைந்த காலத்திலிருந்தே அதன் தனி பெரும்பான்மையை இழந்து வருகிறது. தொடர் தோல்விகளை சந்தித்து வருவது இதற்கு உதாரணமாக பார்க்கப்படுகிறது. அதிமுகவில் நிலவி வரும் பிரிவினைகள் தேர்தல் சமயத்தில் அதற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி அவரது தலைமை பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தினால் பிரிந்தவர்களை சேர்க்க கூடாது என்ற முடிவில் தெளிவாக உள்ளார்.
அதிமுக ஒருங்கிணைய வேண்டுமென கூறிய செங்கோட்டையன் அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை தவெகவில் சேர்ப்பேன் என கூறினார். இவரை தொடர்ந்து, அதிமுக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஓபிஎஸ், இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பு குறித்து முடிவு எடுக்க வேண்டும். இல்லையென்றால், வேறு விதமான முடிவுகள் எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் வரவேற்புரை வழங்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி, ஜெயலலிதாவிற்கு எதிரிகள் மட்டும் தான் இருந்தார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரிகளும், துரோகிகளும் இருக்கிறார்கள் என ஓபிஎஸ்யும், டிடிவி தினகரனையும் மறைமுகமாக விமர்சித்துள்ளார். மேலும் அதிமுகவை ஜெயலலிதா உருவத்தில் எடப்பாடி பழனிசாமி பார்த்து கொண்டிருக்கிறார். அம்மா இல்லையென்றால் என்ன, அண்ணன் இருக்கிறார் என்று தைரியமாக இருக்கிறோம் என்று இபிஎஸ்யை புகழ்ந்தார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் இவர்களை பிரிந்தவர்களை சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில், வளர்மதியின் இந்த கருத்து அவற்றை அடியோடு நசுக்கியுள்ளது.
