TVK: இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அரசியலில் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. 10 முறை தோல்வியடைந்த அதிமுக 11 வது முறையாவது வெற்றி பெற வேண்டுமென வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த முறையும் ஆட்சி கட்டிலில் அமர வேண்டுமென திமுக கடுமையாக முயற்சித்து வருகிறது. நாம் தமிழர் கட்சி தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம் என்று உறுதியாக கூறி வருகிறது. மேலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக களமிறங்கினாலும் வெற்றி பெற்றே ஆக வேண்டுமென கூறி வருகிறது. இவ்வாறு அனைத்து கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள நிலையில், மற்ற கட்சிகளை விட அதிகளவு மக்களை ஈர்த்துள்ள கட்சி என்றால் அது தவெக என்றே கூறலாம்.
விஜய் கட்சிக்கு பெருகும் ஆதரவை கண்ட, அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் பலரும் தவெகவில் இணைய ஆரம்பித்திருக்கின்றனர். இதற்கு பிள்ளையார் சுழி போட்டது அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் தான். அவர் இணைந்த பிறகு தான், நாஞ்சில் சம்பத் மற்றும் சில முக்கிய நிர்வாகிகளும் தவெகவில் இணைய ஆரம்பித்தனர். கரூர் சம்பவம் ஏற்படத்திலிருந்தே தவெகவில் உட்கட்சி மோதல் வெடித்து வரும் சமயத்தில், தற்போது புதிதாக செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்துள்ளதால், மேலும் சில சிக்கல்கள் எழுந்துள்ளதாக தெரிகிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், விஜய்யின் முன்னாள் மேனேஜராக இருந்த பி.டி. செல்வகுமார் இன்று திமுகவில் இணைந்த நிலையில், தவெக குறித்து பேசிய அவர், தவெகவில் புதிய நபர்களின் வருகையால், விஜய்யின் தந்தைக்கே மதிப்பு குறைந்து விட்டது என்று கூறி பகீர் கிளப்பியுள்ளார். அவர் புதிய நபர்கள் என்று சொன்னது செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத்தை தான் என்பது விளங்குகிறது. இவரின் இந்த கருத்து, தவெகவில் ஏற்பட்டுள்ள பிரிவினையை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. ஏற்கனவே புஸ்ஸி ஆனந்துக்கும், ஆதவ் அர்ஜுனுக்கு மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் புதிய நபர்களின் வருகையால், சொந்த அப்பவே ஒதுக்கப்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

