ADMK BJP: பீகாரில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக தமிழக சட்டமன்ற தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறது. அதிமுக உடன் கூட்டணி அமைத்த பாஜக, அதிமுகவை விட அதிகமாக சட்டசபை தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் பாஜகவின் முயற்சிகள் அனைத்தும் சுக்கு நூறாகி கொண்டிருக்கின்றன. அதிமுகவிலிருந்து பிரிந்தவர்கள் பாஜகவில் ஐக்கியமாவார்கள் என்று நினைத்த சமயத்தில் செங்கோட்டையன் திடீரென தவெகவில் இணைந்து விட்டார். டிடிவி தினகரன், இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை NDA கூட்டணியில் சேர மாட்டோம் என்று முடிவாக உள்ளார். அதிமுகவில் நுழைந்தே தீர வேண்டுமென ஓபிஎஸ் போராடி வருகிறார்.
இவ்வாறான நிலையில் தான் ஓபிஎஸ், 5 தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். இவரை தொடர்ந்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு வர, அவரும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க, அதற்கு பின் டிடிவி தினகரனை அண்ணாமலை சந்தித்து பேசினார். இவ்வாறு வரிசையாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி வரும் சூழல் பரபரப்பை உருவாக்கியது. இதனால் பாஜகவின் திட்டம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்தது. இந்த கேள்வியை மேலும் பலப்படுத்தும் வகையில், டிசம்பர் 14 அன்று, தற்போதைய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அமித்ஷா அழைப்பின் பேரில் டெல்லி சென்று அவரை சந்திக்க உள்ளார்.
அந்த சந்திப்பிற்கு முன், இன்று இபிஎஸ்யை நயினார் சந்தித்து பேசியது கவனம் பெற்றுள்ளது. அண்ணாமலை டெல்லி சென்று வந்தவுடன் தினகரனை சந்தித்தது போலவே டெல்லி செல்வதற்கு முன்பு நயினார் இபிஎஸ்யை சந்தித்தது, ஓபிஎஸ், தினகரன், சசிகலா போன்றோரை கட்சியில் சேர்ப்பதை பற்றியும், பாஜகவின் அரசியல் வியூகம் குறித்தும் கலந்துரையாட பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

