DMK: 2026 யில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக மாநில கட்சிகளும், தேர்தல் ஆணையமும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்த SIR பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தன் வசப்படுத்தியே வைக்க வேண்டும் என முயற்சித்து வருகிறது. இதற்காக அதிமுகவை போலல்லாமல், திமுக கூட்டணியை வலுவாக வைக்க முயற்சி செய்து வரும் திமுக தலைமைக்கு, அதன் கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளால் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் நீண்ட காலமாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் அதிக கோரிக்கைகள், ஆட்சி பங்கு போன்ற நிபந்தனைகளை முன்வைத்து வரும் நிலையில், இதற்கு பிறகு, விசிகவும் அதே கோரிக்கையை கேட்க ஆரம்பித்து விட்டன. இந்த இரண்டு கட்சிகளும் திமுக கூட்டணியில் மிகவும் முக்கியமான கட்சிகள் என்பதால், இவர்களின் நிபந்தனைக்கு பதிலளிக்க முடியாமல் ஸ்டாலின் குழப்பத்தில் இருந்தார். இது குறித்து திமுக தலைமை எந்த கருத்தையும் தெரிவிக்காத நிலையில், தற்போது கூட்டணியில் புதிய பூகம்பம் ஒன்று வெடித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், மாநில பொதுச்செயலாளர் சண்முகம், திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்டு பெறுவோம், கேட்கும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம், கொடுக்கும் இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த கருத்து திமுக கூட்டணியில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு கூட்டணி கட்சிகள் தொடர்ந்து அதிக தொகுதிகளை வலியுறுத்தி வருவதால், திமுகவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.