TVK: நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை சுமார் இரண்டரை வருடத்திற்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றி, பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போதிலிருந்து இப்போது வரை அந்த கட்சிக்கு யாரும் எதிர்பார்த்திராத அளவு ஆதரவு குவிந்து வருகிறது. தவெக ஆரம்பிக்கபட்டதிலிருந்தே புஸ்ஸி ஆனந்த, ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண் ராஜ் போன்றோர் அக்கட்சியின் முக்கிய முகங்களாக அறியப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது அவர்களின் வெளிச்சம் குறைய தொடங்கியுள்ளது என்று தவெக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், மக்களை சந்திக்கும் பணியை மேற்கொண்ட விஜய், 5 இடங்களில் அதனை மிகவும் சிறப்பாக செய்து முடித்தார்.
ஆறாவதாக கரூரில் பரப்புரை மேற்கொள்ளும் போது, கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தது நாட்டையே உலுக்கியது. இதனால் தவெகவிற்கு அரசியல் அனுபவம் இல்லையென்ற கருத்து மேலோங்கி இருந்தது. இதனை முறியடிக்கும் வகையில் 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்து அதன் உத்வேகத்தை கூட்டினார். கரூர் சம்பவத்திற்கு பின்பு புஸ்ஸி ஆனந்த் மீது அதிருப்தியில் இருந்த விஜய், செங்கோட்டையன் வருகைக்கு பின், அவரை அடியோடு மறந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இது பல்வேறு நிகழ்வுகளில் உறுதியாகியுள்ளது.
இது நாள் வரை விஜய்யின் சுற்றுப்பயணத்தை புஸ்ஸி ஆனந்த் தான் வரையறுத்து கொடுத்தார். ஆனால் தற்போது அது செங்கோட்டையன் கைக்கு சென்றிருக்கிறது. அந்த வகையில் 18 ஆம் தேதி ஈரோட்டில் நடக்கும், தவெக பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகளை செங்கோட்டையன் நேரடியாக கண்காணித்து வரும் நிலையில், இது குறித்து பேசிய புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் என்ன சொல்கிறாரோ அதன் படி நாங்கள் செயல்பட தயார் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து புஸ்ஸி ஆனந்த இடத்தை செங்கோட்டையன் பிடித்து விட்டார் என்பதை உறுதிப்படுத்தியதை போல உள்ளது என்று பலரும் கூறுகின்றனர். மேலும், தவெகவில் விஜய்க்கு அடுத்த படியாக இனி செங்கோட்டையன் கை ஓங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.