BJP TVK: அடுத்த வருடம் நடக்கும் சட்டசபை தேர்தலுக்காக தமிழக கட்சிகளும், தேசிய கட்சிகளும் மும்முரமாக பணியாற்றி வருகின்றன. இந்நிலையில், புதிதாக உதயமான கட்சியான தவெக தனது முதல் தேர்தலிலேயே முதல்வர் பதவி, ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்று கூறி வருகிறது. மேலும் 70 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த கட்சியான திமுகவையும், இந்தியாவிலேயே மிகப்பெரிய கட்சியான பாஜகவையும் எதிரி என்று கூறியுள்ளது. இவ்வாறு ஆரம்பத்திலேயே மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டிருக்கும் தவெகவின் தாக்கம் அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தவெக உடன் கூட்டணி சேரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்று விஜய் கூறியும் இதுவரை எந்த கட்சியின் கூட்டணியும் உறுதியாகவில்லை. விஜய் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அனைவரும் கூற, அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவை சரி செய்ய முடியாமல் பாஜக திணறி வருகிறது. இதனால் விஜய்யை கூட்டணியில் சேர்த்தால், இதனை சமப்படுத்தி விடலாம் என பாஜக நினைத்தது. இதற்காக தம்மை கொள்கை எதிரி என்று விஜய் கூறினாலும், விஜய்யை கூட்டணியில் சேர்க்க கரூர் சம்பவத்தில் தவெகவின் குரலாக ஒலித்தது. ஆனால் கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லையென்ற முடிவில் விஜய் தெளிவாக இருந்தார்.
எவ்வளவு முயற்சித்து விஜய் பச்சை கொடி காட்டாத ஆத்திரத்தில் இருந்த பாஜக விஜய்யை நேரடியாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தது. இவ்வாறு, சென்று கொண்டிருக்கும் சமயத்தில் தற்போது மீண்டும் விஜய் பாஜக கூட்டணியில் இணைய வேண்டுமென பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், விஜய் திமுகவை வீழ்த்த வேண்டுமென்ற நோக்கில் இருந்தால், வலிமையான கூட்டணியான அதிமுக-பாஜகவில் இணைய வேண்டுமென கூறியுள்ளார். இவரின் இந்த கூற்று, விஜய்யை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியை பாஜக இன்னும் கைவிடவில்லை என்பதை தெளிவாக காட்டியுள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.