DMK MDMK COMMUNIST: 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தற்சமயம் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 தேர்தலிலும் ஆட்சி கட்டிலை தன்வசப்படுத்தியே வைக்க வேண்டுமென பல்வேறு யுக்திகளை வகுத்து வருகிறது. அதற்காக நான்கரை ஆண்டுகளில் மக்களுக்கு செயல்படுத்திய திட்டங்களை அவர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மேலும் 2021 தோல்வியுற்ற பகுதிகளை இந்த முறை கைப்பற்ற வேண்டுமென அந்த தொகுதிகளில் முக்கிய அமைச்சர்களை நியமித்து, திமுக வசம் இழுக்க முயன்று வருகிறது.
மேலும் இந்த காலகட்டத்தில் எந்த ஒரு கட்சியும் கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவது கடினம். அதனால் தங்களது கூட்டணி கட்சிகளுடன் இணக்கமான முறையில் திமுக தலைமை இருந்து வருகிறது. இவ்வாறு வெற்றி பெறுவதற்கு பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் திமுகவிற்கு அதன் கூட்டணி கட்சிகளால் பின்னடைவு ஏற்படும் என்று பலரும் கூறுகின்றனர். அதற்கு ஏற்றார் போல சில நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன. முதலில் தேசிய கட்சியான காங்கிரஸ் அதிக தொகுதிகள் ஆட்சியில் பங்கு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தது.
ஆனால் காங்கிரஸ் பீகார் தேர்தலில் தோல்வியுற்றதை காரணமாக வைத்து இவர்களின் கோரிக்கையை ஸ்டாலின் நிராகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர்களை தொடர்ந்து காங்கிரசை விட தமிழகத்தில் எங்களுக்கு செல்வாக்கு அதிகம், இப்படி இருக்க எங்களுக்கு குறைவான தொகுதிகள் ஒதுக்குவது எந்த வகையில் நியாயம் என்று விசிக கேட்க ஆரம்பித்தது. மேலும் இந்த தேர்தலில் அதிக தொகுதிகளை கேட்போம் என்று விசிகவின் நிர்வாகிகள் கூறி வந்தனர். இவ்வாறு தொகுதி பங்கீடு குறித்த பிரச்சனை திமுகவிற்கு தலை வழியை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.
இப்படி இருக்கும் சமயத்தில் தற்போது புதிதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகமும் இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வரை சந்தித்து பேசியுள்ளனர். இவர்கள் கட்சி நிகழ்ச்சிக்காக அழைப்பு விடுக்க வந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் தேர்தல் நெருங்கும் சமயத்தில் அறிவாலயத்திற்கு நேரில் சென்று ஸ்டாலினை சந்தித்தது தொகுதி பங்கீடு மற்றும் ஆட்சி பங்கு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தான் இருக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.