TVK BJP: 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் பட்சத்தில் இதற்கான வேலைப்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் ஆணையமும், மாநில கட்சிகளும் தீவிரமாக தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன. மேலும் மத்திய அரசு கொண்டு வந்த SIR பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருவதை பார்க்க முடிகிறது. இந்த முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவும் என்று கட்சி தலைவர்களே கூறி வருகின்றனர். அந்த வகையில் கட்சி ஆரம்பித்த ஒன்றரை வருடங்களிலேயே நடிகர் விஜய் தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை வார இறுதி நாளான சனி, ஞாயிறு கிழமைகளில் மட்டும் நடத்தியது விமர்சனங்களுக்கு உள்ளானது. இதனால் வீக்கெண்ட் தலைவர் என்று விஜய் விமர்சிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, இது நாள் வரை விஜய் செய்தியாளர்களை சந்தித்து பேசாததும்,விமர்சிக்கப்பட்டது. மேலும், கரூரில் நடந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லையென்று பலரும் கூறி வந்தனர்.
இவ்வாறு தவெக மீதும், விஜய் மீதும் பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, விஜய் அமைதியாக இருப்பதை பற்றி அவரது கருத்தை கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், பேச வேண்டிய இடத்தில் பேசுங்க விஜய், அரசியலில் கம்முன்னு இருக்க முடியாது என்றும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் அமைதியாக இருப்பது சரியல்ல என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து பாஜகவிற்கு விஜய் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதை மறைமுகமாக கூறியுள்ளது போன்று தெரிகிறது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.