TVK BJP: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அதிமுக, திமுகவின் ஆட்டத்தை மட்டுமே எதிர்கொண்டு வந்த தேர்தல் களம் தற்போது தவெகவின் தாக்கத்தையும் எதிர்கொள்ள தயராகிவிட்டது. நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றியதிலிருந்தே அதற்கு அதிகளவு ஆதரவு குவிந்து வருகிறது. இதனை பயன்படுத்தி வெற்றி பெற்று விடலாம் என்று நினைந்த விஜய்க்கு கரூர் சம்பவம் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
இதில் ஏற்பட்ட இழப்புகளுக்கு விஜய்யின் அரசியல் அறியாமை தான் காரணம் என எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. இதனால் சிறிது காலம் வெளியில் தலைக்காட்டாமல் இருந்த விஜய், சிறப்பு பொதுக்குழு கூட்டம் மூலம் வெளியே வந்தார். இதன் பிறகு, கட்சிக்கு அனுபவம் உள்ள அரசியல் தலைவர் தேவை என்று விஜய் தேடி கொண்டிருந்த சமயத்தில் தான் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தவெகவில் இணைந்தார். இவர், பாஜக சொல்லி தான் தவெகவில் இணைந்தார் என்று பலரும் கூறி வந்தனர். தற்போது அது நிரூபணமாகியுள்ளது.
தவெக இதுவரை எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காத நிலையில், அதனை கூட்டணியில் சேர்க்க நினைத்த அதிமுகவிடமும் நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று கூறி அந்த கூட்டணிக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால் பாஜக விஜய்யை கூட்டணியில் சேர்க்கும் முடிவை கைவிடுவதாக தெரியவில்லை. விஜய் கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லை என்பதில் முடிவாக இருந்ததால் இவரை பாஜக வாசம் இழுக்க செங்கோட்டையன் அனுப்பப்பட்டிருக்கலாம் என்பதை அவர் தனது பேச்சின் மூலம் நிரூபித்துள்ளார்.
அதிமுக-பாஜக கூட்டணியில் விஜய் இணைவாரா என்ற கேள்விக்கு தேர்தல் களம் எப்படி செல்லும் என்று யாராலும் யூகிக்க முடியாது. அரசியல் நிலவரங்களை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவர் பாஜக- தவெக கூட்டணிக்கு மறுப்பு தெரிவிக்காத காரணத்தினால் இந்த கூட்டணி உறுதி செய்யப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக விஜய்யை பாஜக கூட்டணியில் சேர்க்க செங்கோட்டையன் உள்ளிருந்தே வேலை பார்க்கிறார் என்று பலரும் கூறுகின்றனர்.