PMK ADMK TVK: அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக கட்சிகளும், தேர்தல் ஆணையமும் தங்களது பணியில் வேகமெடுத்துள்ளன. மேலும் மக்களை சந்திக்கும் பணி, கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடு போன்றவை பேசப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் பாமகவில் கட்சி யாரிடம் உள்ளதென்றே தெரியாத நிலை உள்ளது. கட்சியின் தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் மறுக்காத காரணத்தினால் அன்புமணி தலைவராக தொடர்கிறார்.
இதனை தொடர்ந்து அன்புமணிக்கும், ராமதாசுக்கும் மோதல் போக்கு நீடித்து கொண்டே செல்வதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு, ராமதாஸ் தலைமையில் சாதிவாரிய கணக்கெடுப்பு நடத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது பிசுபிசுத்து போன நிலையில் இன்று அன்புமணி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதால் அதற்கு எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. இதற்காக திமுகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் அன்புமணி தரப்பு அழைப்பு வழங்கியது. இதனால் இந்த கூட்டம் அனைத்து கட்சி கூட்டமாக மாறும் என்று யூகிக்கப்பட்ட சமயத்தில், முக்கிய கட்சிகளான அதிமுகவும், தவெகவும் இதில் பங்கேற்காதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அன்புமணி அதிமுக உடன் நெருக்கம் காட்டி வருவதால், அதிமுக இந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கிய பங்காற்றும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி அன்புமணியை ஓரங்கட்டியது விவாதங்களுக்கு வழி வகுத்துள்ளது. மேலும் தவெக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காதது பாமகவை அவர் தீவிரமாக எதிர்ப்பதை காட்டுகிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதனால் பாமகவின் வாக்கு வங்கியிலிருந்து விஜய்க்கு வாக்கு செல்லாது என்பது நிரூபணமாகியுள்ளது.