TVK: தமிழக வெற்றிக் கழகம் தனது ஒன்றரை வயதை மட்டுமே எட்டிய நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலுக்காக மக்கள் சந்திப்பை தீவிரப்படுத்தியுள்ளது. முதலில் 2 மாநாடுகள், அதன் பிறகு 5 பிரச்சார பயணங்களை நடத்தி முடித்த தவெக, கரூரில் பரப்புரை மேற்கொள்ளும் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இது விஜய்யின் அரசியல் வாழ்க்கையை அடியோடு சறுக்கும் வகையில் அமைந்துவிட்டது. இதனை வைத்தே அவரை முடக்கிவிடலாம் என்று எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டின. இதற்கு பிறகு விஜய்யின் மக்கள் சந்திப்புக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில் கரூர் சம்பவத்திற்கு பிறகு புதுவையில் பொதுக்கூட்டம் நடத்திய விஜய், இன்று தவெகவின் மேற்கு மண்டல பொறுப்பாளர் மற்றும் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனின் கோட்டையாக கருதப்படும் ஈரோட்டில் மக்களை சந்தித்து பேச உள்ளார். கரூர் சம்வத்திற்கு பிறகு, தமிழகத்தில் தவெக நடத்தும் முதல் பிரச்சாரம் என்பதால் இது விஜய்யின் அரசியல் வாழ்க்கையிலும் சரி, செங்கோட்டையனின் அடுத்த கட்ட நகர்விலும் சரி இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
வழக்கம் போல இந்த கூட்டத்திற்கும் 84 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. விஜய் எல்லா இடங்களிலும் திமுகவை நேரடியாகவும், பாஜக, அதிமுகவை மறைமுகமாகவும் விமர்சித்து வருவதை பார்க்க முடிகிறது. புதுவையில் கூட பாஜக என்று கூறாமல், ஒன்றிய அரசு என்று பாஜகவை மறைமுகமாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் இந்த செயலால் இவர் அதிகளவில் விமர்சிக்கபட்டார். இதன் காரணமாக ஈரோடு பரப்புரையில், பாஜகவையும், அதிமுகவையும் விஜய் நேரடியாக விமர்சிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் மூலம் தவெக, பாஜகவின் பி டீம் இல்லையென்பது நிரூபணமாகும் என்று பலர் கூறுகின்றனர்.