DMK TVK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தொடங்கி சிறிய கட்சிகள் வரை அனைவரும் மும்முரம் காட்ட தொடங்கிவிட்டன. தொடர் தோல்விகளை தழுவி வரும் அதிமுக, இந்த முறை வெற்றி பெற்றே ஆக வேண்டுமெனவும், ஆளுங்கட்சியாக உள்ள திமுக இம்முறையும் ஆட்சியை தன் வசப்படுத்திய வைக்க வேண்டுமெனவும் போராடி வருகிறது. இவ்வாறான நிலையில் அதிமுகவில் பல்வேறு அணிகளும், உட்கட்சி பிரச்சனையும் தலைதூக்கியுள்ளது. இதுவே அதன் தோல்விக்கு காரணமாக அமையும் என்று கணிக்கப்படுகிறது.
இதன் காரணமாக திமுக அதன் கூட்டணி கட்சிகளிடமும், உட்கட்சி விவகாரங்களிலும் சற்று கவனமாகவே இருந்து வருகிறது. ஆனால் திமுக கூட்டணி கட்சிகளோ, தேர்தல் நெருங்கும் சமயம் பார்த்து திமுக தலைமையிடம் பல்வேறு நிபந்தனைகளை முன் வைத்து அதன் வெற்றிக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. திமுக உடன் நீண்ட காலமாக கூட்டணியில் இருக்கும் தேசிய கட்சியான காங்கிரஸ் முதல் முதலில் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகளை கேட்ட நிலையில், விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் வரிசையாக வாய் திறந்தன. இந்த இக்கட்டான சூழலில் திமுகவில் அங்கம் வகித்து வரும் தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு கருத்தை கூறியுள்ளது.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் கலை இலக்கிய மாநில செயலாளர் கம்பம் குணாஜி, தொகுதி பங்கீடு குறித்து பேசும் போது, 2026 தேர்தலில் நாங்கள் கேட்கும் தொகுதியை கொடுக்காவிட்டால் திமுக கூட்டணியிலிருந்து விலகுவோம். தனித்து போட்டியிடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் கட்சிக்கு 6 சீட்டுகள் கொடுத்தால் மட்டுமே நாங்கள் திமுக உடன் தொடருவோம் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து விவாதங்களுக்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல், திமுக தலைமைக்கு பேரிடியாகவும் அமைந்துள்ளது.