ADMK TVK: 2026 யில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடும் பேசப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் அரசியல் களத்தில் புதிய புயலை ஏற்படுத்தும் வகையில் நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளார். இவரின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு யாரும் எதிர்பார்த்திராத அளவு ஆதரவு பெருகியது. இதனை கண்ட தேசிய கட்சிகளும் சரி, மாநில கட்சிகளும் சரி விஜய்யை கூட்டணியில் சேர்க்க முயற்சித்தன. ஆனால், கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லையென்ற முடிவில் விஜய் பாஜகவை புறக்கணித்தார்.
மேலும் விஜய் முதல்வர் வேட்பாளர் என்ற தீர்மானத்தை அதிமுக ஏற்காததால் அதிமுக-தவெக கூட்டணியும் கிடப்பிலேயே இருந்தது. ஆனாலும் கூட அதிமுக விஜய்யை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியை கைவிடவில்லை. கரூர் சம்பவத்தில் தவெகவின் குரலாக ஒலித்தது இதற்கு உதாரணமாக பார்க்கப்படுகிறது. இந்த சமயத்தில் கூட விஜய், அதிமுக கூட்டணிக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார். இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த கூடிய ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்களோடு தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைக்கலாம் என்று கூறினார்.
இதற்கு பதிலடியாக பேசிய தவெகவின் இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார், அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி ஒரு கணக்கை சொன்னார். இந்த நிலையில் அவருக்கு நம்பிக்கை இல்லையா என்று தெரியவில்லை. எங்கள் தலைவரை முதல்வராக்க யார் யாரெல்லாம் ஒத்த கருத்துடன் இருக்கிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி என்று முடிவாக கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து அதிமுக உடன் தவெக கூட்டணி அமைக்காது என்பதை நிரூபித்திருக்கிறது.