DMK CONGRESS: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டசபை தேர்தலுக்காக மாநில கட்சிகளை விட தேசிய கட்சிகளே ஆர்வமாக உள்ளன. தமிழகத்தில் பாஜகவிற்கு அதிகளவில் செல்வாக்கு இல்லாத காரணத்தினால், அது அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. காங்கிரஸ் கட்சியும் நீண்ட காலமாக ஆளுங்கட்சியான திமுக உடன் கூட்டணியில் தொடர்ந்து வருகிறது. தற்போது பீகார் தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ், தமிழக தேர்தலை மட்டும் தான் நம்பியுள்ளது என்றே சொல்லலாம். இதற்காக திமுக தலைமையிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது.
ஆனால் திமுகவோ இந்த கோரிக்கைகளுக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால் தவெக உடன் கூட்டணி அமைக்கும் எண்ணத்தில் சில காங்கிரஸ் தலைவர்கள் உள்ளதாக தகவல் பரவியது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக காங்கிரசின் முக்கிய முகமான பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை நேரில் சந்தித்து பேசினார். இவர் விஜய்யை சந்திப்பதற்கு டெல்லி தலைமை அனுமதி அளிக்கவில்லை என்று பலரும் கூறினார். இந்த சமயத்தில் தான் காங்கிரஸ் அமைத்த ஐவர் குழு, ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி காங்கிரஸ்-தவெக கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இப்படி அனைத்து தரப்பிலிருந்தும் காங்கிரஸ் கூட்டணி குறித்து விவாதங்கள் எழுந்து வரும் வேளையில், இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இவரின் இந்த திடீர் சந்திப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. டெல்லி மேலிடத்தின் உத்தரவின் பேரில் தான் இவர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும், இந்த சந்திப்பில் ஆட்சி பங்கு பற்றி உரையாடபட்டிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் ஆட்சி பங்கு என்ற மரபே இல்லாத பட்சத்தில் காங்கிரசின் கோரிக்கையை திமுக ஏற்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.