DMK VCK PMK: 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் காத்து கொண்டிருக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் என்றாலே நம் நினைவுக்கு வருவது அதிமுகவும், திமுகவும் தான். ஆனால் இந்த முறை அதிமுக, திமுக, நாதக, தவெக என நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அரசியல் அரங்கு பல்வேறு திருப்பங்களை எதிர்கொண்டுள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக அடுத்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.
ஆனால் அதன் கூட்டணி கட்சிகளோ அதன் எண்ணத்தை சிதைக்கும் வகையில் சில செயல்பாடுகளை செய்து வருகின்றன. அதில் முதலாவது ஆட்சி பங்கு, அதிக தொகுதிகள் என்ற கோரிக்கையாகும். இது குறித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில், புதிதாக பாமகவின் ஒரு பகுதி, திமுக கூட்டணியில் இணைந்தாலும், விசிக கூட்டணியை விட்டு வெளியேறும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
இதனை ஏற்கனவே ஒருமுறை திருமாவளவன் கூறியுள்ள நிலையில், இன்னமும் கூட இவர் இந்த நிலைப்பாட்டிலிருந்து பின் வாங்காமல் இருப்பது ஸ்டாலினுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாமக தற்சமயம் இரண்டாக பிரிந்துள்ள சமயத்தில் நிறுவனர் ராமதாஸிடம் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இப்படி இருக்கும் சமயத்தில் திமுக கூட்டணியில் முதன்மை கட்சியாக அறியப்படுவது விசிக தான். ஒரு கட்சியின் வருகையால் மற்றொரு முக்கிய கட்சி விலகுவது திமுகவிற்கு தேர்தல் சமயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்படுகிறது.