DMK NMMK: தற்சமயம் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 தேர்தலிலும் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டுமென முயன்று வருகிறது. இதற்காக மக்கள் சந்திப்பை குறைத்து விட்டு, நான்கரை ஆண்டுகளில் செயல்படுத்திய திட்டங்களை மக்களுக்கு நினைவு கூறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மேலும், சென்ற தேர்தலில் தோல்வியடைந்த தொகுதிகளில் இந்த முறை வெற்றி பெற வேண்டுமென அங்கு முக்கிய அமைச்சர்களை நியமித்து அப்பகுதி மக்களை கவரும் பணியையும் திமுக கையில் எடுத்துள்ளது.
இது மட்டுமல்லாமல் அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தையும் திமுக வசம் ஈர்க்கும் பணியையும் ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார். இவ்வாறு ஏகப்பட்ட ஏற்பாடுகளை செய்துள்ள திமுக, தனது கூட்டணி கட்சிகளிடமும் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது. திமுக உடன் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக மற்றும் இன்னும் சில சிறிய கட்சிகளினால் திமுக கூட்டணி இப்போது வரை பலமான கூட்டணியாக உள்ளது. இப்போது இருக்கும் நிலைமையில் எந்த ஒரு கட்சியாலும் கூட்டணி இல்லாமல் ஆட்சிக்கு வர முடியாது என்ற காரணத்தினால் திமுக அதன் கூட்டணி கட்சிகளை பலப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஸ்டாலினுக்கு மேலும் பலத்தை கூட்டும் நோக்கில் “நமது மக்கள் முன்னேற்ற கழகம்” கட்சி திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜகவை தவிர வேறு எந்த கட்சியும் சேராத நிலையில், திமுகவில் அதன் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வது இந்த தேர்தலிலும் திமுக வெற்றி பெறுவதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.