ADMK AMMK BJP: அடுத்த 5 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களம் புதிய வேகமெடுத்துள்ளது. இந்த முறை அதிமுக, திமுக, தவெக, நாதக என நான்கு முனை போட்டி நிலவும் என்று கணிக்கப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல அரசியல் அரங்கும் செயல்பட்டு கொண்டிருக்கிறது. நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் போன்றவை தமிழக அரசியலை சூடுபிடிக்க வைத்துள்ளது. இந்த வரிசையில் மிக முக்கியமாக அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவுகள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைவராக பொறுப்பேற்ற பிறகு அதிமுகவின் முக்கிய முகங்களாக இருந்த சசிகலா, ஓபிஎஸ், தினகரன் போன்றோரை கட்சியிலிருந்து நீக்கினார். அண்மையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் டிடிவி தினகரன் அமமுக கட்சியை தொடங்கி NDA கூட்டணியில் அங்கம் வகித்து வந்தார். இந்த சமயத்தில் தான் பாஜக- அதிமுக கூட்டணி அமைத்தது. இதன் பிறகு நயினாரின் செயல்பாடுகள் பிடிக்காததாலும், இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று கூறியும் தினகரன் NDA கூட்டணியிலிருந்து விலகினார்.
இவரை மீண்டும் கூட்டணியில் சேர்க்க பாஜக எவ்வளவு முயற்சித்தும் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை அமமுக பாஜக உடன் இணையாது என்று திட்டவட்டமாக கூறி வந்தார். இவ்வாறான நிலையில், டிடிவி தினகரன் பாஜகவில் மீண்டும் சேர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என்பது போன்ற கருத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். டிடிவி தினகரனும், இபிஎஸ்யும் ஒரே கூட்டணியில் வர முடியுமா என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதிலளித்த அவர், ஒரு காலத்தில் இந்திரா காந்திக்கு எதிராக திமுக கருப்பு கொடி காட்டியது.
ஆனால் சில மாதங்களில் அதே திமுக இந்திரா காந்தியுடன் கூட்டணி வைத்தது. எனவே அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்று கூறியுள்ளார். தினகரன் கூட்டணியில் சேர்வது தொடர்பான கேள்விக்கு, இவர் மறுப்பு தெரிவிக்காத காரணத்தினால், தினகரன் கூடிய விரைவில் பாஜக கூட்டணியில் இணைவார் என்பது வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது. மேலும் நேற்று தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இபிஎஸ்யிடம் இதை பற்றி தான் பேசி இருப்பார் என்பதும் நிரூபனமாகியுள்ளது. இதனால் தினகரன் NDA கூட்டணியில் இணையும் செய்தியை இபிஎஸ் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.