TVK BJP ADMK: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக மாநில கட்சிகளும் தேசிய கட்சிகளும் மிகவும் மும்முரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக தமிழக சட்டசபை தேர்தலை நோக்கி திரும்பியுள்ளது. இதற்காக அதிமுக உடன் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தேர்தலை கருத்தில் கொண்டு இருவரும் கூட்டணி அமைத்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து வேறு எந்த கட்சியை கூட்டணியில் சேர்க்கலாம் என்று தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் நடிகர் விஜய் கட்சி தொடங்கி, அக்கட்சி 2026 தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார்.
இவர் இந்த அறிவிப்பை வெளியிட்டதிலிருந்தே இவருக்கான ஆதரவு யாரும் எதிர்பார்த்திராத அளவு உள்ளது. மேலும் திமுகவை அரசியல் எதிரி என்றும், பாஜகவை கொள்கை எதிரி என்றும் கூறிய இவர் தற்போது வரை அந்த நிலையிலிருந்து மாறாமல் உள்ளார். ஆனால் பாஜகவோ தம்மை கொள்கை எதிரி என்று விஜய் கூறினாலும் பரவாயில்லை என்று அவரை கூட்டணியில் சேர்க்க முயற்சித்தது. இதற்காக கரூர் சம்பவத்தில் விஜய்யின் குரலாக ஒலித்தது மட்டுமில்லாமல், பாஜக எம்பிக்கள் 8 பேர் கொண்ட தனிநபர் குழுவையும் அமைத்து விசாரித்து வந்தது. அப்போதும் கூட விஜய் பாஜக உடன் கூட்டணி இல்லையென்ற முடிவில் தெளிவாக இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் விஜய்யை கடுமையாக விமர்சிக்க தொடங்கி விட்டனர்.
தவெக ஒரு கட்சியே இல்லை. கவுன்சிலர் கூட இல்லாத கட்சி என்று கடுமையான வார்த்தைகளை முன் வைத்தனர். இவ்வாறான நிலையில் தான் தமிழக பாஜக தலைவர் நயினாரிடம் செய்தியாளர்கள் விஜய் குறித்து கேள்வி எழுப்பிய போது, விஜய்யை ஸ்பாயிலர் என்று சொல்லிவிட முடியாது. அவர் யாருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார் என்பதன் அடிப்படையில் தான் அதனை தீர்மானிக்க முடியும் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து தவெகவால் அதிமுக, பாஜக என இரண்டு கட்சிக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை நிரூபித்துள்ளது. ஏனென்றால் இத்தனை நாளாக விஜய்யை விமர்சித்து வந்த பாஜக தற்போது இவ்வாறான கருத்தை கூறியுள்ளது அதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.