TVK CONGRESS DMK: 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தன்வசப்படுத்தியே வைக்க வேண்டுமென ஆளுங்கட்சியாக உள்ள திமுக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக தனது கூட்டணி கட்சிகளை பலப்படுத்தி வரும் திமுகவிற்கு புதிய கட்சியான தவெக எல்லா வகையிலும் இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. நீண்ட காலமாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் விஜய்யின் வருகையால் திமுகவிலிருந்து பிரியும் நிலையில் உள்ளது. விஜய்யும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியும் நல்ல நண்பர்கள் என்பதால் இந்த கூட்டணி அமைய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் கட்சி திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்டு பெறுவதற்காக மட்டுமே விஜய்யை பயன்படுத்தி வந்தது. ஆனாலும் கூட தவெக கூட்டணியில் இணைய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலரும் விருப்பம் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் அண்மையில் காங்கிரஸின் முக்கிய முகமான பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை நேரில் சந்தித்து பேசி, தவெக-காங்கிரஸ் கூட்டணிக்கு அச்சாரமிட்டார். இவ்வாறு சென்று கொண்டிருக்கும் சமயத்தில் தான் இந்த கூட்டணியை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக தவெக நிர்வாகிகளும், காங்கிரஸின் முக்கிய தலைகளும் ஒரு மேடையில் சந்தித்துள்ளனர்.
கன்னியாகுமரியில் நடந்த கிறிஸ்துவ சமத்துவ விழாவில், தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுசாமி, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தலைவர் கலந்து கொண்டது கேள்விகளை எழுப்பியுள்ளது. விஜய், காங்கிரஸை எந்த இடத்திலும் விமர்சிக்காமல் இருப்பதும், பாஜகவை கொள்கை எதிரி என்று கூறுவதும், இவர்களின் இந்த சந்திப்பும் தவெக- காங்கிரஸ் கூட்டணி அமைவதற்கான சமிக்கைகளாகவே பார்க்கப்படுகிறது.