PMK: தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் மும்முரமாக பணியாற்றி வருகின்றன. ஆனால் பாமகவில் மட்டும் தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்டுள்ள தலைமை பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் தனது மகன் என்று கூட பாராமல் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கினார் ராமதாஸ். இதனை எதிர்த்து தேர்தல் ஆணையம் சென்ற அன்புமணிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது.
கட்சியின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று என்று தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றம் சென்ற ராமதாசுக்கு அப்போதும் ஏமாற்றமே மிஞ்சியது. அன்புமணி தான் தலைவர் என்று தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பை நிராகரிக்காத நீதிமன்றம், பாமகவில் உட்கட்சி பிரச்சனை உள்ளதால் தேர்தல் நெருங்கும் சமயத்தில் வேட்புமனுவில் யார் கையெழுத்திடுவது என்ற குழப்பம் வரும் என்பதால், பாமகவின் மாம்பழ சின்னத்தை முடக்கி வைப்பதாக கூறியது.
இவ்வாறு உட்கட்சி மோதல் நீண்டு கொண்டே செல்லும் நிலையில், பாமகவின் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பதென்று தெரியாமல் திணறுகின்றனர். இந்த சூழலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை என்றும், அன்புமணியின் பொய் இனிமேல் எடுபடாது என்றும் கூறினார். மேலும் 99% பாமகவினர் தற்போது தான் பக்கம் நிற்கின்றனர் என்றும் தெளிவுபடுத்தி இருந்தார். பாமக என்னுடையது என்று அன்புமணி கூறி வர, அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லையென்று ராமதாஸ் கூறியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.