PMK: அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் வெற்றி வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்த சமயத்தில் தான் பாமகவில் தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்டுள்ள தலைமை பிரச்சனை உச்சத்தை எட்டியுள்ளது. இந்த மோதல் போக்கு டெல்லி உயர் நீதிமன்றம் வரை செல்ல, பாமகவில் உட்கட்சி மோதல் இருப்பதால் தேர்தல் சமயத்தில் வேட்புமனுவில் யார் கையெழுத்திடுவது என்ற பிரச்சனை வரும் அதனால், பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படுவதாக உத்தரவிட்டது.
மேலும் அன்புமணி தான் தலைவர் என்று தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பை நீதிமன்றம் மறுக்காததால் அன்புமணியே தலைவராக தொடர்ந்து வருகிறார். தந்தை மகன் மோதலுக்கு மூலக் காரணமாக இருந்தது ராமதாஸின் வலதுகரமாக அறியப்பட்ட ஜி.கே. மணியின் மகனான தமிழ்குமரனை கட்சியின் இளைஞரணி தலைவர் பதவியில் அமர்த்தியது தான். இதில் தொடங்கிய கருத்து வேறுபாடு, ராமதாஸின் பேரன் முகுந்தனை இளைஞரணி தலைவர் பதவியில் அமர்த்திய போதும் தொடர்ந்த்து.
இதனையும் அன்புமணி விரும்பாததால் இந்த மோதல் போக்கு நீண்டு கொண்டே சென்றது. இந்நிலையில் கட்சியின் மூத்த தலைவர்கள் ராமதாஸ் பக்கமும், இளைய தலைமுறையினர் அன்புமணி பக்கமும் ஆதரவு தெரிவித்து வந்தனர். மேலும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குறை கூறி வந்த சமயத்தில், பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டு வருவதால், கட்சியின் அமைப்பு விதிப்படி ஏன் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்ககூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்கும் படி ஜி. கே மணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
இவரின் கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஜி.கே மணி எந்த விளக்கமும் அளிக்காததால் இவர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவதாக கட்சி தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். இவரின் இந்த நீக்கம் ராமதாசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து ராமதாஸ் பக்கம் இருக்கும் முக்கிய முகங்கள் பலரையும் கட்சியிலிருந்து நீக்கும் பணியை அன்புமணி மேற்கொண்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் மூலம் ராமதாஸ் பலவீனமடைந்து, பாமக தம்முடைய கட்டுப்பாட்டில் வந்து விடும் என்று அன்புமணி நினைப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.