ADMK TMMK: அடுத்த 4 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான பணிகளும், கூட்டணி கணக்குகளையும், வெற்றி வியூகங்களையும் அனைத்து கட்சிகளும் வகுத்து வரும் வேளையில் பல்வேறு திருப்பங்களும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், விஜய்யின் அரசியல் எழுச்சி, அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகள், பாமகவில் ஏற்பட்டுள்ள தந்தை, மகன் பிரச்சனை போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த காலகட்டத்தில் எந்த ஒரு கட்சியாக இருந்தாலும், கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தனித்து நின்று ஆட்சியை பிடிக்க முடியாது.
இதனால் அதிமுக, திமுக, தவெக, தேசிய கட்சிகள் என அனைத்தும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. வழக்கம் போல நாதக தனித்து நின்று களம் காண போகிறது. இந்நிலையில், அதிமுக பாஜக, தமாகா உடன் மட்டுமே கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையில் அடுத்ததாக பாமக, தேமுதிக போன்ற கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த இக்கட்டான சூழலில், ஜான் பாண்டியன் கட்சியான தமமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து சற்று விலகியே இருந்தது.
இதனால் தமமுக திமுக, பாஜக போன்ற கட்சியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பாஜக கூட்டணியில் இணைய ஜான் பாண்டியனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், பாஜகவோ அதிமுக உடன் கூட்டணியில் உள்ளது. இவ்வாறான நிலையில் அதிமுக கூட்டணியில் எங்கள் கட்சி தொடருமா இல்லையா என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்று ஜான்பாண்டியன் கூறியுள்ளார். இதன் காரணமாக ஜான் பாண்டியன் கூடிய விரைவில் அதிமுகவிலிருந்து விலகி வேறு கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.