ADMK DMK: கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக இந்த முறையாவது வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமர வேண்டுமென பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. இதற்காக முதலாவதாக தேசிய கட்சியான பாஜகவுடன் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதனை கவனத்தில் கொள்ளாமல் அக்கட்சியுடன் ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து விட்டது. மேலும் பாஜக உடன் இணைந்து மூன்றாம் நிலை கட்சிகளான பாமக, தேமுதிக, தவெக போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இது மட்டுமல்லாமல், மக்களை சந்திக்கும் பணிகளையும் மேற்கொண்டு வரும் இபிஎஸ் பாதியளவு தொகுதிகளில் மக்களை சந்திப்பை முடித்து விட்டார். மீதமிருக்கும் தொகுதிகளில் பாஜக மாநில தலைவர் நயினார் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இவ்வாறு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் அதிமுக தற்போது புதிதாக 10 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இந்த குழுவில், முன்னாள் அமைச்சர்களான அதிமுக துணை பொது செயலாளர் நத்தம் இரா. விஸ்வநாதன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் சி.பொன்னையன், தேர்தல் பிரிவு செயலாளர் வி.ஜெயராமன், அமைப்பு செயலாளர்கள் டி.ஜெயக்குமார், விழுப்புரம் மாவட்ட செயலாளர் சி.வி. சண்முகம் எம்பி, முன்னாள் அமைச்சர் செ.செம்மலை, மகளிரணி செயலாளர் பா.வளர்மதி, அமைப்பு செயலாளர் ஓ.எஸ். மணியன், ஆர்.பி உதயகுமார். எஸ்.எஸ் மணியன் போன்றோர் அங்கம் வகித்து உள்ளனர்.
இந்த குழு தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதை தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதற்கான வேலைகளில் ஈடுபடுவார்கள். ஆளுங்கட்சியாக உள்ள திமுக தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக கனிமொழி எம்.பி தலைமையில் ஒரு குழு அமைத்துள்ள நிலையில் அதனை பின்னுக்கு தள்ள எடப்பாடி பழனிசாமியும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்.