DMK CONGRESS: அடுத்த சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகள் வரை அனைத்தும் அயராது உழைத்து வருகின்றன. தற்போது தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 தேர்தலிலும் வெற்றி பெற பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. மேலும் பீகார் தேர்தலில் தோல்வியடைந்த தேசிய கட்சியான காங்கிரஸும் தமிழக தேர்தலை மட்டுமே நம்பியுள்ளது என்றே சொல்லலாம். இதற்காக இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து வரும் தேர்தலை எதிர்க்கொள்ள போகிறது.
இந்நிலையில் திமுகவிற்கு பாதகமாகவும், காங்கிரஸுக்கு சாதகமாகவும் விஜய் களமிறங்கியுள்ளார். காங்கிரஸ் பீகார் தேர்தலில் தோல்வியடைந்ததை மையப்படுத்தி அதன் கோரிக்கைகளை திமுக மறுத்து வருகிறது. இதனால் இவர்கள் திமுகவிலிருந்து விலகி, விஜய் கட்சியில் இணையும் போக்கை காட்டி வருகின்றனர். காங்கிரஸுக்கு தமிழகத்தில் அதிகளவில் செல்வாக்கு இல்லாவிட்டாலும், அது திமுகவில் இருப்பது ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருந்தது. இந்த சூழலில் இவர்கள் தவெகவில் இணைவதற்கு ஆர்வம் காட்டி வருவது திமுக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு காங்கிரஸ், திமுக இடையே கருத்து வேறுபாடும், கூட்டணி எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கும் சமயத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் தொண்டர்கள் திமுக மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், கடந்த உள்ளாட்சி தேர்தலில் எங்களுக்கு உரிய இடங்களை வழங்காமல் திமுக அவமானப்படுத்தி விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் சில எம்எல்ஏ-க்கள் மட்டும் தான் திமுக கூட்டணியை விரும்புவதாகவும், பெருவாரியான தொண்டர்கள் தவெக கூட்டணியை விரும்புவதாகவும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.