PMK: அடுத்த 4, 5 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் அயராது உழைத்து வருகிறது. திராவிட கட்சிகள் தேர்தலில் தீவிரம் காட்டி வந்தாலும், மற்றொரு புறம் அதிமுகவில் உட்கட்சி பிரச்சனையும், திமுக அமைச்சர்கள் மீதுள்ள ஊழல் புகாரும் தலைதூக்கியுள்ளது. இதனை மிஞ்சும் அளவிற்கு பாமகவில் தந்தைக்கும், மகனுக்கும் தலைமை போட்டி அதிகரித்துள்ளது. திராவிட கட்சிகளில் சில பிரச்சனைகள் இருந்தாலும் அதில் யார் தலைவர் என்பதில் தெளிவு உள்ளது.
ஆனால் பாமகவில் அதில் தான் குளறுபடிகள் உள்ளன. இந்த சச்சரவு காரணமாக அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து ராமதாஸ் நீக்கினார். இதனை எதிர்த்து தேர்தல் ஆணையம் சென்ற அன்புமணிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது. மேலும் கட்சியின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் கூற, இதனை சட்டரீதியாக எதிர்கொள்வதாக ராமதாஸ் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தை டெல்லி நீதிமன்றத்திற்கு கொண்டு சென்ற ராமதாசுக்கு அங்கும் ஏமாற்றமே மிஞ்சியது.
அன்புமணி தான் தலைவர் என்று தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பை நீதிமன்றம் நிராகரிக்கவில்லை. மேலும் பாமகவில் தலைமை போட்டி நிலவுவதால் தேர்தல் சமயத்தில் வேட்புமனுவில் யார் கையெழுத்திடுவது என்ற சிக்கல் ஏற்படும் என்பதால் பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படுவதாக உத்தரவிட்டது. இவ்வாறு பாமகவில் மோதல் போக்கு நீண்டு கொண்டே செல்லும் நிலையில், ராமதாஸின் வலதுகரமாக அறியப்பட்ட ஜி.கே. மணி அன்புமணியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இது செல்லாது என்று ராமதாஸ் தரப்பு கூறி வரும் நிலையில், ராமதாஸ் அதிரடியாக ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளார். பசுமை தாயக அமைப்பின் தலைவராக இருந்த சௌமியா அன்புமணியை அவரது பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளார். ராமதாஸின் ஆதரவாளர்களை அன்புமணியும், அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாசும் கட்சியிலிருந்து நீக்கி வருவது, பாமகவில் மோதல் போக்கை அதிகரித்துள்ளது.