PMK: பாமகவில் தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்டுள்ள தலைமை பிரச்சனை அனைவரும் அறிந்த ஒன்று. இருவரும் மாறி மாறி பாமகவிற்கு உரிமை கொண்டாடி வரும் நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம் பாமகவின் மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் அன்புமணி தரப்பு அதிமுக- பாஜக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில், ராமதாஸ் திமுக உடன் பேசி வருவதாக தகவல் வெளிவந்தது. இந்நிலையில் ராமதாஸின் வலதுகரமாக அறியப்பட்ட ஜி.கே மணியை அன்புமணி கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கினார்.
இது செல்லாது என்று ராமதாஸ் தரப்பு கூறி வர, இன்று சேலத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பசுமை தாயக அமைப்பின் தலைவராக இருந்த சௌமியா அன்புமணியின் பதவியை ராமதாஸ் பறித்தார். மேலும் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் முழு உரிமை ராமதாசுக்கே உள்ளது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது மட்டுமல்லாமல் 28 ஆம் தேதியுடன் அன்புமணியின் தலைவர் பதவி காலம் முடிவடைந்து விட்ட காரணத்தினால் புதிய தலைவராக ராமதாஸ் நியமிக்கபட்டுள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கௌரவ தலைவராக ஜி.கே மணி, கட்சியின் செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி போன்றோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. கட்சியின் தலைவர் அன்புமணி தான் என்பதை டெல்லி நீதிமன்றம் மறுக்காத நிலையில் ராமதாஸ் இவ்வாறான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் பாமகவில் இவ்வாறான குளறுபடிகள் அரங்கேறிவருவது பாமகவிற்கு தேர்தல் முடிவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.