DMK BJP: பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக தமிழக சட்டமன்ற தேர்தலை குறிவைத்துள்ளது. இதற்காக தமிழகத்தில் வலுவாக உள்ள கட்சியான அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக பாஜக இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதனை பொருட்படுத்தாமல் தேர்தலை மையமாக வைத்து கை கோர்த்துள்ள இந்த கட்சிகள் அடுத்ததாக வேரெந்த கட்சிகளை கூட்டணியில் சேர்க்கலாம் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதனடிப்படையில் பாமகவில் அன்புமணியின் ஆதரவு அதிமுக-பாஜகவிற்கு கிடைத்து விட்டது. அன்புமணியை தொடர்ந்து ராமதாசை சம்மதிக்க வைக்க சில வேலைகளை செய்து வருகின்றன.
மேலும், தேமுதிகவின் நிலை என்னவென்றே தெரியவில்லை. இவ்வாறான சந்தர்ப்பத்தில் தவெகவை கூட்டணியில் சேர்க்க பாஜக எவ்வளவு முயற்சித்தும் அது நிறைவேறவில்லை. பாஜகவிற்கு தமிழகத்தில் அதிகளவில் செல்வாக்கு இல்லாத காரணத்தினால் அதிமுக கூட்டணியால் மட்டுமே பாஜகவை வெற்றி பெற வைக்க முடியாது. இதனை அறிந்த பாஜக மூன்றாம் நிலை கட்சிகளை கூட்டணியில் சேர்க்க எவ்வளவு முயற்சித்தும் அந்த முயற்சிகள் வெற்றியடையவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த டெல்லி மேலிடம் திமுக கூட்டணி கட்சிகளை பாஜகவில் சேர்க்க ஆலோசித்து வருவதாக மூத்த நிர்வாகிகள் கூறினார்கள். இதனை உறுதிப்படுத்தும் விதமாக பாஜகவின் மாநில துணை தலைவர், கே.பி ராமலிங்கம் ஒரு கருத்தை கூறியுள்ளார்.
திமுகவின் தொகுதி பங்கீடு குறித்து பேசிய அவர், திமுக 200 தொகுதிகளில் போட்டியிடும் என்று ஸ்டாலின் கூறுகிறார். அப்படியானால் கூட்டணி கட்சிகளுக்கு வெறும் 30 இடங்கள் தான் கொடுப்பாரா? இட பங்கீட்டை பொறுத்து தான் கூட்டணி கட்சிகள் முடிவெடுக்கும் என்று சூசகமாக கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகள் கொடுப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்களை பாஜக கூட்டணிக்கு கொண்டு வந்து விடலாம் என்று அவர்களை திட்டம் தீட்டி இருப்பதை தெளிவுப்படுத்தியுள்ளது. மேலும் மதிமுக, பாஜக கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வருவதால் கூடிய விரைவில், மதிமுக-பாஜக கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.