BJP ADMK: அடுத்த சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. கூட்டணி கணக்குகளும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் தீவிரமடைந்துள்ளது. 2021 தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக இந்த முறை வெற்றி பெற வேண்டுமெனவும், தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக ஆட்சி கட்டிலை தன் வசப்படுத்தியே வைக்க வேண்டுமெனவும் பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்து வருகிறது. அதிலும் முக்கியமாக எடப்பாடி பழனிசாமி அதிமுக பொறுப்பை ஏற்றதிலிருந்தே தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால் பாஜக உடன் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் அதனுடன் கூட்டணி அமைத்துள்ளது.
அதிமுகவிற்கு இந்த தேர்தல் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு தேசிய கட்சியான பாஜகவிற்கு இந்த தேர்தல் முக்கியம். தமிழகத்தில் பாஜகவிற்கான எதிர்ப்பு அதிகளவில் உள்ள சமயத்தில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகளும் பாஜகவிற்கு பாதகமாக அமைந்துள்ளது. தேர்தல் நெருங்கும் சந்தர்பத்தில் முக்கிய முகங்களை நீக்கி வரும் இபிஎஸ் டெல்லி மேலிடத்தில் அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட கூடாது என்றும் கூறி விட்டார். இவ்வாறான நிலையில் விஜயை கூட்டணியில் சேர்த்தால் வெற்றி பெறலாம் என நினைத்த பாஜகவிற்கு இதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. இது மட்டுமல்லாமல், அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என பியூஸ் கோயல் கூறியும் இபிஎஸ் இதனை ஏற்க மறுத்து விட்டதாக தகவல் வெளியானது.
அதிமுக பல பிரிவுகளாக இருப்பது தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்த பாஜக இபிஎஸ்யை தனித்து விட முடிவு செய்துள்ளதாக பாஜகவின் மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர். அதற்காக தற்போதய தமிழக பாஜக தலைவர் நயினாரையும், முந்தய மாநில தலைவர் அண்ணாமலையும் ஒன்று சேருமாறு அமித்ஷா அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது. இதனை நயினார் செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார். அண்ணாமலை இபிஎஸ்க்கு எதிராக இருக்கும் சமயத்தில் இவர்கள் இருவரும் ஒன்றிணைவது முழுக்க முழுக்க இபிஎஸ்க்கு எதிரான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.