தமிழக வனத்துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தனது பணிகளை சரிவர செய்யவில்லை விகாஸ் மாதவ் குற்றச்சாட்டு
காஞ்சிபுரம் மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சுற்றியுள்ள பகுதிகளில் எந்தவிதமான தொழிற்சாலை நிறுவனங்கள் இயங்குவதற்கும் அனுமதி இல்லை.ஆனால் அந்த பகுதியில் தனியார் மருந்து தொழிற்சாலை ஒன்று இயங்கி வருவதாகவும்,அவற்றிலிருந்து சரணாலயத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நச்சுக் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது என்றும், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
புகாரின் அடிப்படையில் சென்னை காலநிலை கண்காணிப்பு குழு மற்றும் சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பு சார்பில் அங்கே உள்ள நீர்ப்பாசன கிணறு மற்றும் தொழிற்சாலை அருகிலுள்ள குளம் மற்றும் அருகிலுள்ள பல நீர்நிலைகளில் இருந்து மாதிரி நீர் எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த ஆய்வின் மூலம் பல உண்மைகள் வெளிக்கொணரப்பட்டது.அந்த நீரில் டைப்ரோமோக்குளோரோ மீதேன் மற்றும் டைக்களோரோ மீதேன்,டெட்ரா குளோரோ ஈத்தேன், டோலுயின் போன்ற நச்சுப் பொருட்கள் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலை பூஜ்ஜிய நிலையை கழிவு வெளியேற்றம் வசதி கொண்டதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது.ஆனால் தற்போது அந்த தொழிற்சாலையின் சுற்றுப்புற பகுதிகளில் நச்சுப் பொருட்கள் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அந்த தொழிற்சாலையில் டிஸோனிடைன் தயாரிக்க கரைப்பானாக பயன்படுத்தப்படும் பொருள்தான் டைக்ளோரோ மீத்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே அந்த சுற்றுப்புற பகுதிகளில் கலந்துள்ள நச்சுப் பொருட்கள் இந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படுவதுதான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வன உயிரின சரணாலயத்திற்குள் விதிகளை மீறி தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருவதுடன் நச்சு வேதிப் பொருட்களையும் வெளியேற்றி வருகிறது.இதிலிருந்து அந்த நிறுவனம் இயங்க அனுமதி அளித்த தமிழக வனத் துறையும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் தனது பணிகளை சரிவர செய்யவில்லை என்று சென்னை காலநிலை கண்காணிப்பு குழு சேர்ந்த விகாஸ் மாதம் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை சுற்றியுள்ள ஈரநிலங்களில்தான் பறவைகளுக்கு உணவு அளிக்கின்றன.ஆனால் அந்த நிலம் தற்போது மாசுபட்டு இருப்பது பறவைகளின் உணவில் நஞ்சு கலந்து கொடுப்பதற்கு சமம் ஆகும் என்று சென்னை காலநிலை கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த விகாஸ் மாதவ் கூறினார்.