நிலச்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு?

Photo of author

By Pavithra

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தமிழக எல்லைப்பகுதியில் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் ஒன்று இயங்கி வருகின்றது.அதில் தென் தமிழ்நாட்டை சேர்ந்த 20 குடும்பங்கள் தேயிலைத் தோட்டத்தில் உள்ள வீடுகளிலேயேதங்கி,மொத்தம் 78 பேர் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கேரளாவின் பல பகுதிகளிலும் தொடர்ந்து அதிமழை பெய்து வருகின்றது.இந்த கனமழையால் கேரளாவின் இடுக்கி மாவட்டம் தமிழக எல்லைப்பகுதியில் மூணாறு ராஜமலை பெட்டிமுடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் தேயிலை தோட்டத்தில் அமைந்துள்ள 20 வீடுகளும் மண்ணில் புதைந்தன.

இந்த சம்பவத்தை அறிந்து மீட்பு குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.ஆனால் தொடர் மழை காரணமாகவும் இருள் சூழ்ந்ததன் காரணமாகவும் மீட்பு பணி சற்று தாமதமானது.நேற்று முன்தினம் 17 பேர் சடலங்களாகவும், 16 பேர் படுகாயங்களுடனும் மீட்கப்பட்டது.

மீண்டும் நேற்று நடந்த மீட்பு பணியில் மேலும் 10 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று வரை நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.நேற்றும் தொடர் மழை காரணமாக மீட்பு பணியில் அவ்வப்போது தாமதமாகி மேலும் இருள் சூழ்ந்ததால் நேற்று மாலை 6 மணி வரை மீட்பு பணி நிறுத்தப்பட்டது.

மீண்டும் இன்று காலை தொடங்கிய மீட்பு பணியில் மேலும் மண்ணுக்குள் புதையுண்ட 16 சடலங்கள் மீட்டு எடுக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து கனமழை காரணமாக மீட்பு பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.இதுவரை மொத்தம் நிலச்சரிவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.