இவர்களெல்லாம் தமிழுணர்வை கற்றுத்தர களமிறங்கியது தமிழினத்தின் தலையெழுத்து! தங்கர்பச்சான் விமர்சனம்

0
84

இவர்களெல்லாம் தமிழுணர்வை கற்றுத்தர களமிறங்கியது தமிழினத்தின் தலையெழுத்து! தங்கர்பச்சான் விமர்சனம்

சமீப காலமாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மும்மொழி கொள்கையை செயல்படுத்த பாஜக தலைமையிலான மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதை பாஜகவின் கூட்டணி கட்சிகள் உட்பட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன.

இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா சமீபத்தில் இந்தி தெரியாது போடா என்று உணர்த்தும் வகையில் டீ ஷார்ட் அணிந்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது கடும் வைரலாகி வருகிறது. இதனையடுத்து அவரை தொடர்ந்து திரை பிரபலங்கள் பலர் இந்தி திணிப்பிற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவரெல்லாம் தமிழுணர்வை கற்று தர களமிறங்கியது தமிழினத்தின் தலையெழுத்து என இயக்குனர் தங்கர்பச்சான் கடுமையாக சாடியுள்ளார்.

இது குறித்து இயக்குனரும், நடிகருமான தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, தமிழுணர்வை வெளிப்படுத்தும், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோரின் கூட்டத்தில், எத்தனை பேர், தமிழ் வழிக் கல்வி படித்தவர்கள்; இவர்கள் குறைந்தபட்சம், தவறில்லாமல், தமிழில், 10 வரிகள் எழுத முடியுமா; சரியான உச்சரிப்புடன் தமிழ் பேசத்தான் முடியுமா?

தமிழுணர்வுடன், ஆங்கிலம் கலந்த தமிழில், தங்கள் தமிழ் உணர்வை! ஏதோ பனியன் நிறுவனத்தின் வணிகத்துக்காக களமிறக்கி இருக்கும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், நடிகர்கள் ஹரிஷ் சரவணனும், சாந்தனு பாக்கியராஜும், ஆங்கில வழிக் கல்வி படித்தவர்கள்.

இவர்களுக்கு, ஹிந்தி எதிர்ப்பு என்பது, ஹிந்தி படங்களில் வாய்ப்பு கிடைக்காதவரை தான். இவர்களெல்லாம், நமக்கு தமிழுணர்வை கற்றுத்தர களம் இறங்கி இருப்பது, தமிழினத்தின் தலையெழுத்து என்று அவர் அதில் கூறியுள்ளார்.

இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளியான படங்களில் பெரும்பாலும் தமிழில் மட்டுமே வசனங்கள் அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தான் சார்ந்த திரைத்துறையில் தொடர்ந்து தமிழுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து வரும் தங்கர்பச்சான் அவர்களின் விமர்சனம் கவனத்தில் கொள்ள வேண்டியதாகவே உள்ளது.