எடப்பாடி அதிமுகவின் கோட்டையா? பாமகவின் கோட்டையா? சர்ச்சையை கிளப்பிய முதல்வர்! கொந்தளிக்கும் பாமகவினர்
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு ஆளும் அதிமுகவின் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19 ஆம் தேதி முதல் தன்னுடைய சொந்த தொகுதியான எடப்பாடியிலிருந்து பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.இந்த பிரசாரத்தின் போது எடப்பாடி தொகுதி எஃகு கோட்டை,மேலும் முதலமைச்சர் தொகுதி என்ற பெருமை எங்கள் எடப்பாடிக்கு உண்டு.கடந்த 43 ஆண்டு கால அரசியலில் ஒருமுறை கூட எடப்பாடி தொகுதியில் திமுக வெற்றி பெற்றதில்லை என்று பேசியுள்ளார்.
இந்நிலையில் திமுக ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை என முதல்வர் கூறியது உண்மையாக இருந்தாலும் அதிமுகவின் கோட்டை என்று எந்த அடிப்படையில் கூறினார் என்று கொந்தளிக்கின்றனர் சேலம் மாவட்ட பாமகவினர்.எடப்பாடி அதிமுகவின் கோட்டை என்று கூறும் தமிழக முதல்வரே கடந்த கால வரலாற்றில் எடப்பாடி தொகுதியில் தோல்வி அடைந்தது அவருக்கு தெரியவில்லையா என்று கூறுகின்றனர்.மேலும் பாமகவின் ஆதரவு இல்லாமல் எந்த கட்சியும் இந்த எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்றதில்லை.தொகுதி மறு சீரமைப்பு செய்த போது இங்குள்ள பாமகவின் வாக்குகள் பிரிக்கப்பட்டிருந்தாலும் இன்னும் பாமகவிற்கு அதே அளவு வாக்கு வங்கி உள்ளதாகவே அக்கட்சியினர் கூறுகின்றனர்.
இதை அடிப்படையாக கொண்டு கடந்த 43 ஆண்டு கால அரசியலில் திமுக வெற்றி பெறவில்லை என்பது உண்மை என்றாலும் அதிமுக அங்கு தோல்வியே சந்திக்கவில்லையா என்றும் திமுகவினர் கேள்வியெழுப்பியுள்ளனர்.கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட எடப்பாடி பழனிசாமி அவர்கள் சாதி அடிப்படையில் செயல்பட்டதாக கூறி அவரது சொந்த கட்சியினரே அவரை புறக்கணித்து விட்டு பாமக வேட்பாளரை ஆதரித்தார்கள் என்பதையும் தற்போதைய முதல்வர் மறந்து விட்டாரா? என்றும் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இவர்களின் கூற்றை வைத்து ஆராய்ந்த போது இது வரை எடப்பாடி தொகுதியில் அதிமுக தொடர் வெற்றி பெறவில்லை என்பது உறுதியாகிறது.அந்த வகையில் முதல்வர் எடப்பாடி தொகுதியை எப்படி அதிமுகவின் கோட்டை என்று கூறலாம் என்ற கேள்வி அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுகிறது.இதுகுறித்து அதிமுகவினரிடம் பேசியதில் தற்போது அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பாமகவின் வாக்குகளையும் மனதில் வைத்து தான் முதல்வர் அப்படி பேசியுள்ளார் என்று சமாளிக்கின்றனர்.அப்படி பாமகவின் வாக்குகளையும் கருத்தில் கொண்டு பேசியிருந்தால் அதிமுக மற்றும் பாமக கூட்டணியின் கோட்டை என்றல்லவா பேசியிருக்க வேண்டும் என்று கொந்தளிக்கின்றனர் அந்த தொகுதியில் உள்ள பாமகவினர்.
இதையெல்லாம் உறுதி செய்ய கடந்த கால அரசியலை பார்க்கையில் கடந்த 1996 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் திமுகவை எதிர்த்து போட்டியிட்ட பாமகவின் வேட்பாளர் ஐ கணேசன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த தேர்தலில் திமுக இரண்டாம் இடமும் அதிமுக சார்பில் போட்டியிட்ட தற்போதைய முதல்வரான எடப்பாடி பழனிசாமி மூன்றாம் இடத்தை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பாமக வேட்பாளர் ஐ கணேசன் அதற்கு முன் 1977 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் இதே தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அதிமுகவின் சார்பில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து நின்ற பாமகவின் வேட்பாளாரான காவேரி வெற்றி பெற்றுள்ளார்.ஆனால் இந்த தேர்தலில் பாமக திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் இந்த வெற்றியில் திமுகவின் பங்கும் உள்ளது என்றே ஏற்று கொள்ளலாம்.அதே போல கடந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மீதுள்ள அதிருப்தியில் அதிமுகவினர் பெரும்பாலோனோர் பாமக வேட்பாளரை ஆதரித்ததை அதிமுகவினரே உண்மையென கூறியுள்ளனர்.அந்த தேர்தலின்போது அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கே இங்கு வெற்றி பெறுவோமா என்ற அச்சம் இருந்ததாக அப்பகுதியில் பேசப்படுகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கூட சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வெற்றி பெற்றதற்கு இந்த தொகுதிக்குட்பட்ட எடப்பாடி பகுதியில் அதிமுகவின் வாக்குகள் குறைந்ததையும் காரணமாக கூறுகின்றனர்.எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அரசியல் சூழல் இப்படியுள்ள நிலையில் முதல்வர் எப்படி எடப்பாடி அதிமுகவின் கோட்டை என்று கூறினார் என்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாமக உள்ளதா இல்லையா என்ற சந்தேகத்தை கிளப்பும் வகையில் பாமகவின் செயல்பாடுகள் உள்ள இந்த சூழலில் முதல்வரின் இந்த பேச்சு அதிமுக கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்றே எடுத்துக் கொள்ளலாம்.