தமிழக அரசு கடன் வாங்கி பொங்கல் பரிசு விநியோகம் செய்வதாக எதிர்க்கட்சியான திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டி இருக்கிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எல்லா ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2500 ரூபாய் பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என டிசம்பர் மாதம் 19ஆம் தேதி சேலத்தில் ஆரம்பித்த முதல் நாள் தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
இந்த நிலையிலே, அரசு கருவூலம் காலியாக இருக்கிறது எனவும், அதிமுக அரசு கடன் வாங்கி அரிசி அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் பொங்கல் பரிசு விநியோகம் செய்வதாகவும், திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் பி . டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டி இருக்கிறார்.
பொங்கல் பரிசு விநியோகம் செய்வதை நாங்கள் எதிர்க்கவில்லை என்று தெரிவித்த பழனிவேல் தியாகராஜன், கொரோனா பாதித்த போது வாழ்வாதாரத்தை இழந்து இருந்த மக்களுக்கு 5000 ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என்று தெரிவித்ததே திமுக என தெரிவித்தார். ஆனாலும் அதனை நிராகரித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இப்பொழுது தேர்தல் வரவிருக்கும் காரணத்தால், கடன்வாங்கி பொங்கல் பரிசு திட்டத்தை செயல்படுத்தி கொண்டிருப்பதாகவும் விமர்சனம் செய்தார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை செயல்படுத்தும் பெயரில் மத்திய, மாநில அரசுகள் மக்கள் பணத்தை வீணடித்து விட்டதாக குற்றம் சாட்டி இருக்கிறார். அரசாங்கங்கள் குடியிருப்பாளர்கள் இடமிருந்தும் வரி செலுத்தும் குடிமக்கள் இடமும் கருத்து கேட்காமல் மாற்றத்தை கொண்டுவர முயற்சி செய்கின்றனர். இது மக்களுக்கு எந்த ஒரு பயனும் அளித்து விடாது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.