மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
சட்டசபை தேர்தலையொட்டி பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மத்திய அமைச்சர்கள் என அனைவரும் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். கொரோனா காரணமாக, அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படாத சூழ்நிலையில், அரசு விழாவில் பங்கேற்பதற்காக நவம்பர் மாதம் 23ம் தேதி சென்னை வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
அவருக்கு ஆளும் கட்சியான அதிமுக, மற்றும் அவருடைய கட்சியான பாஜகவை சார்ந்தவர்களும், விமான நிலையத்தில் மிக உற்சாகமான வரவேற்பை அளித்தார்கள். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த அரசு விழாவில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடரும் என்று துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்த நிலையிலே, வரும் ஜனவரி மாதம் 14ம் தேதி பொங்கல் தினத்தன்று, நடைபெறவிருக்கும் துக்ளக் ஆண்டுவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டிற்கு வர இருந்தார் அமித்ஷா.
அந்த சமயத்தில் ,ஆளும் கட்சியான அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் அமைச்சர் வேட்பாளரை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதோடு நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்து உடல் நலம் விசாரிக்கவும் அமித்ஷா திட்டமிட்டு இருந்ததாகவும், தகவல்கள் வெளியாகின.
இந்த சூழ்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை திடீரென்று ரத்து செய்யப்பட்டிருப்பதாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது. முன்னரே பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர் தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்க ஒன்று.