இது அரசின் வேலையா? நடிகர் கமலஹாசன் ஆவேசம்
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளாராக பணியாற்றி வந்த பாலு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சரக்கு வாகனத்தை ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் இந்த சம்பவத்திற்கு முன்பு ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொற்கை விலக்குப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது குடித்து விட்டு சரக்கு வாகனம் ஓட்டிய முருகவேல் என்பவரை தடுத்து நிறுத்தி அந்த வாகனத்தை பறிமுதல் செய்துள்ளார்.
இதனால் கோபமடைந்த முருகவேல் வேறொரு சரக்கு வாகனத்தை எடுத்து வந்து இவர் மீது ஏற்றி கொலை செய்துள்ளார்.இதனையடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் அவரே காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து நடிகர் கமலஹாசன் ஆளும் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியுள்ளதாவது.
மதுவுக்கு அடிமையான குடிநோயாளியால், கடமை தவறாத எஸ்.ஐ. பாலு கொலை செய்யப்பட்டுள்ளார்.மேலும் இது போன்ற சம்பவங்களை தவிர்க்க டாஸ்மாக் கடைகள் இருக்குமிடங்களில் மறுவாழ்வு மையங்கள் உடனே அமைக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல, அதை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.