முன்னாள் அ.தி.மு.க.அமைச்சர் மீதான வழக்கு! வெளியான பரபரப்பு ஆடியோ! மனைவியின் ஆதங்கம்!
சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் படத்தில் நடித்துள்ளார். மலேசிய நாட்டின் குடியுரிமை பெற்றுள்ள, இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த மனுவில், அமைச்சர் மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொல்லி உறவு வைத்துள்ளோம் எனவும், கடந்த 5 வருடங்களாக நானும், அவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்தோம்.
3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்தேன். அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்தேன். இப்போது என்னை திருமணம் செய்ய மறுத்து அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த புகாரை மணிகண்டன் மறுத்து பேட்டி கொடுத்துள்ளார். நடிகை சாந்தினி யார் என்றே எனக்கு தெரியாது என்றும் கூறினார். பணம் பறிக்கும் கும்பல் பின்னணியில் இந்த பொய்யான புகார் கொடுக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் மணிகண்டன் மீது கொலை மிரட்டல், திருமணம் செய்வதாக ஏமாற்றுதல் போன்ற 6 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.அடுத்தகட்டமாக மணிகண்டனிடம் விசாரணை நடத்தி அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இந்த வழக்கு விசாரணை அடையாறு துணை கமிஷனர் விக்ரமனின் நேரடி மேற்பார்வையில் நடந்து வருகிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி டாக்டர் வசந்தி, ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியது:
எனது கணவர் டாக்டர் மணிகண்டன் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். மிகவும் கவுரவமான, அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், அவர் அமைச்சராக பதவி வகித்தபோது பலரும் அவரை சந்தித்து, அருகில் நின்று படம் எடுத்துள்ளனர். அப்படிப்பட்ட ஒரு படத்தை நெருக்கமாக இருப்பது போல சித்தரித்து, அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தற்போது வெளியிட்டு, மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்தில் நடிகை சாந்தினி பொய் புகார் அளித்துள்ளார்.
போலீஸ் விசாரணையில் உண்மைகள் வெளிவரும் என நம்புகிறேன். மேலும் அந்த புகாரில் கூறி உள்ள கார் எண் தவறானது. அந்த காரை ராமநாதபுரத்தில் நான் பயன்படுத்தி வருகிறேன்.
சில நபர்கள் இது தொடர்பாக எனது கணவரை தொடர்பு கொண்டு இது போல புகார் அளிக்க போகிறோம். கோடிக்கணக்கில் பணம் தந்தால் இத்தோடு விட்டு விடுகிறோம் என மிரட்டினர். அதற்கு அடிபணியாததால் இந்த பொய்யான புகாரை அளித்துள்ளனர்.
இதனால் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் அவமானத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளனர். பொய் புகார் அளித்த நடிகை சாந்தினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார்.
இந்த வழக்கு குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது
இந்த வழக்கில் சாந்தினி கொடுத்துள்ள ஆதாரங்களை ஆய்வு செய்து வருகிறோம். சைபர் கிரைம் போலீசாரும் அவர் கொடுத்த ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை சரிபார்த்து வருகிறார்கள்.
அவர் 3 முறை கருக்கலைப்பு செய்ததாக சொல்கிறார். அவர் கருக்கலைப்பு செய்தது மணிகண்டனின் நண்பர் ஆஸ்பத்திரி என்று தெரிவித்துள்ளார். அந்த ஆஸ்பத்திரியின் டாக்டர் ஒருவருடன் சாந்தினி உரையாடிய ஆடியோ ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் உண்மைத்தன்மை குறித்தும் விசாரணை நடக்கிறது.
இது மோசடி மற்றும் பாலியல் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் ஆதாரங்கள்தான் வழக்கில் பேசும். சாந்தினி கருக்கலைப்பு செய்த ஆஸ்பத்திரி விசாரணை வளையத்தில் உள்ளது. மேலும் மணிகண்டனின் கார் டிரைவர், அவர் அமைச்சராக இருந்தபோது அவரிடம் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரி ஆகியோரிடம் விசாரணை நடக்கிறது. இதுபோன்ற விசாரணை அதிரடியாக நடக்கிறது. இந்த விசாரணை முடிவடைந்ததும், கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியின் டாக்டர் மற்றும் அமைச்சர் மணிகண்டனின் நண்பரிடம் நடிகை சாந்தினி பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.