காலக்கெடு முடிந்த நிலையில் எந்த நிறுவனமும் இன்னும் ஒப்பந்தபுள்ளி தரவில்லை என அமைச்சர் கூறினார்!
தமிழகத்தில் 18 முதல் 44 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த போதிய அளவில் மருந்துகள் இல்லாதநிலையில், தடுப்பூசி கொள்முதலுக்கு உலகளாவிய ஒப்பந்த புள்ளி கடந்த மாதம் கோரப்பட்டது. 90 நாட்களில் 5 கோடி தடுப்பூசிகள் வழங்க தயாராக உள்ள நிறுவனங்கள் ஜூன் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் கூறியிருந்தது.
உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிக்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், எந்த ஒரு முக்கிய நிறுவனமும் தடுப்பூசி வழங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளியை அளிக்கவில்லை. கேரளா, தெலுங்கானா, அரியானா ஆகிய மாநிலங்கள் வழங்கிய ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகத்தின் அறிவிப்பையும் தடுப்பூசி நிறுவனங்கள் புறக்கணித்துள்ளன.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி கொள்முதலுக்கு எந்த நிறுவனமும் ஒப்பந்தப்புள்ளி அளிக்கவில்லை என்று தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உதகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கு உலக அளவில் தமிழக அரசு சார்பில் கோரப்பட்ட ஒப்பந்தபுள்ளி, அதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. ஆனால், இதுவரை எந்த நிறுவனமும் தடுப்பூசி வழங்க முன்வரவில்லை. இதற்கு மத்திய அரசே காரணம் என்று கூற முடியாது. எந்த காரணத்தினால் ஒப்பந்தப்புள்ளி எடுக்கவில்லை என்று ஆய்வு செய்து, மீண்டும் உலகளாவிய ஒப்பந்த புள்ளி கோரப்படும் என்று அவர் கூறினார்.