ஆவின் நிறுவனங்களில் டிஎன்பிஎஸ்சி மூலம் பணிகள் வழங்கப்படும் என கூறிய அமைச்சர்!
நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து, தமிழக பால் வளத் துறை அமைச்சராக நாசர் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றபின் தமிழகத்தில் மட்டும் 22 ஆவின் நிறுவனங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக ஆவின் நிறுவனத்தின் விஜிலன்ஸ் பிரிவுக்கு புகார் அளித்ததன் காரணமாக ரகசிய விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணை நேர்மையாக நடைபெற்றால் ஏராளமான அதிகாரிகள் அகப்படுவார்கள் என கூறப்பட்ட நிலையில், தற்போது 34 பொது மேலாளர்கள் கூண்டோடு பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். பால் விநியோகம் செய்ததில் ஆவின் நிறுவனத்துக்கு 45 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நெருக்கமானவர்களுக்கு உயர் பதவி வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவரது வீட்டுக்கு மட்டும் அதாவது சொந்த உபயோகத்திற்காக மட்டும் ஒன்றரை டன் இனிப்புகளை பயன்படுத்தி இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
2017- 2018 காலகட்டத்தில் ஆவினில் பணிபுரியும் ஊழியர் களுடன் 4.30 லட்சத்துக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பட்டாசு வியாபாரம் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ஆவின் நிறுவனத்தில் முறைகேடான நியமனங்கள் ரத்து செய்யப்பட்டு டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஆவின் பொருட்களை மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.