கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் கடையில் ஏற்பட்ட பயங்கர விபத்து! வெடித்து சிதறிய பொருட்கள்!

Photo of author

By Hasini

கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் கடையில் ஏற்பட்ட பயங்கர விபத்து! வெடித்து சிதறிய பொருட்கள்!

Hasini

Computer spare parts store accident! Explosive Scattered Items!

கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் கடையில் ஏற்பட்ட பயங்கர விபத்து! வெடித்து சிதறிய பொருட்கள்!

சென்னை அண்ணாசாலை, சாந்தி தியேட்டர் அருகே 5 மாடிகள் கொண்ட தனியாருக்கு சொந்தமான வணிக வளாகம் ஒன்று உள்ளது. இங்கு டீக்கடை, ஜூஸ் கடை, வங்கி உட்பட பல நிறுவனங்கள் உள்ளது. அந்த கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் ஒரு தனியார் நிறுவனமும், நான்காவது மாடியில் கல்வி நிறுவனம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் மூன்றாவது மாடியில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது.இதைப்பார்த்த தரைதளத்தில் இருந்த காவலாளி சத்தம் போட்டுக் கொண்டே ஓடினார். அதை கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் வணிக வளாகத்தின் முன்பு திரண்டனர். இந்த சம்பவம் குறித்து உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் மூன்றாவது மாடியில் மளமளவென தீ பற்றி எரிய ஆரம்பித்தது. அங்கிருந்த பணியாளர்களும், வாடிக்கையாளர்களும் பீதியில் அலறினார்கள். கொழுந்து விட்டு எறிந்த தீயின் காரணமாக அவர்களால் வெளியே செல்ல முடியவில்லை.

இதனால் அங்கிருந்த முன் பக்க ஜன்னல் அருகே வந்து காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள் ! என்ற அபயக் குரல் எழுப்ப ஆரம்பித்தனர். மேலும் அந்த கரும் புகை நான்காவது மாடிக்கு செல்ல ஆரம்பித்தது. அதன் காரணமாக அங்கிருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பகுதியில் உள்ள மாடிப்படி வழியே கீழே இறங்கினார். தகவலின் பேரில் திருவல்லிக்கேணி எழும்பூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மேலும் தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஸ்கை லிப்ட் ராட்சச வாகனத்தின் மூலம் மூன்றாவது மாடியில் ஜன்னல் ஓரத்தில் நின்ற கைக்குழந்தை உட்பட 10 பேரை கீழே இறக்கினார்கள். அதில் இரண்டு மாற்றுத்திறனாளி ஆண்கள் என்றும் 8 பெண்களும் 6 மாத கை குழந்தையும் இருந்தனர். இதற்கிடையில் அந்த பகுதியில் எட்டு ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் இருந்தது.

இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும் கட்டிடத்திற்குள் யாரேனும் சிக்கி உள்ளார்களா என தீயணைப்பு வீரர்கள் பரிசோதித்துக் கொண்டே தண்ணி பீச்சி அடித்தனர். இருந்த போதும் உள்ளே இருந்த எலக்ட்ரானிக் பொருட்கள் தீப்பிடித்து வெடித்து சிதறியது.

மேலும் தீ பரவ ஆரம்பித்தது. இதனால் அண்ணாசாலை பகுதியே புகைமண்டலமாக காட்சி அளித்தது. இதனை அடுத்து மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், வேப்பேரி உட்பட பதிமூன்று தீயணைப்பு வாகனங்களும் நூற்றுக்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் அண்ணா சாலையை நோக்கி படையெடுத்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீரை பீய்ச்சி தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். அனைத்து வாகனங்களிலும் தண்ணீர் காலியாகிவிட்ட  நிலை ஏற்பட்டபோது, வீரர்கள் சுதாரித்து சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தை தொடர்பு கொண்டு, தகவல் தெரிவித்தனர்.

முதலில் 7 லாரிகளில் வந்த தண்ணீரும் தீர்ந்த நிலையில், மீண்டும் 6 லாரிகள் மூலம் தண்ணீர் பீச்சி அடித்து மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதையடுத்து தீ விபத்து நடந்த மூன்றாவது மாடிக்கு வீரர்கள் நேரடியாக சென்று யாராவது சிக்கி இருக்கிறார்களா? என்றும் சோதனை நடத்தினார்கள். அதிர்ஷ்டவசமாக இந்த தீவிபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. ஆனால் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் இருந்த அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களும் எரிந்து சாம்பலானது.

இந்த சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த தீ விபத்து சம்பவத்தினால் அண்ணாசாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.