தொலைதூர கல்வியில் படித்தால் இப்படித்தான்! உங்களுக்கு தெரியாதா?
பலருக்கு அதிக அளவு படிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் அவர்களது சந்தர்ப்ப சூழ்நிலை படிப்பை முடிக்க முடியாமலும், இல்லை பாதியிலேயே நிறுத்திவிடும் படியும் உள்ளது. சிலருக்கு அதிர்ஷ்டம் கை கொடுத்தால், அவர்கள் படித்த படிப்புக்கு ஏற்ப அரசு உத்தியோகமே கிடைத்து விடுகிறது. ஆனால் அந்த உத்தியோகத்தில் இருந்து பதவி உயர்வு கிடைக்கவில்லை என்று ஒருவர் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழ்நாடு பத்திரப்பதிவு துறையில் செந்தில்குமார் என்ற நபர் இரண்டாம் நிலை சார் பதிவாளராக பதவி வகிக்கிறார். இவர் துறை ரீதியாக நடைபெற்ற பல தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் கூட, தனக்கு முதல் நிலை சார் பதிவாளராக பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்றும், அதனால் தனக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டி உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அவருக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட்டு இருந்தார். அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் எந்த அரசுத் துறையில் பணி புரிந்தாலும் பதவி உயர்வு பெற முடியாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் தொலைதூர கல்வி மூலம் பட்ட மேற்படிப்பை முடித்து பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற தகுதியில்லை என்றும் அதிரடியாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.