கர்நாடகாவை எதிர்த்து தமிழக பாஜக உண்ணாவிரத போராட்டம்!! மாட்டுவண்டியில் மாநில பாஜக தலைவர்!!
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதாக கூறி அதற்கு அனுமதி வாங்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இந்த மேகதாது அணை கட்டுதல் விவகாரம் தமிழகம் மற்றும் கர்நாடகாவிற்கு இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மேகதாது அணை கட்டுதல் விவகாரத்தை எதிர்த்து தமிழகம் அரசியல் கட்சிகள் பல்வேறு வகையில் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் இந்த விவகாரம் குறித்து டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் முக்கிய அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு பிடிவாதமாக உள்ளது.
மேலும் அணை கட்டுவதற்கு அனுமதி வேண்டி கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரான எடியூரப்பா பல முயற்சிகளை செய்துள்ளார். இதன்படி, அவர் டெல்லி சென்று குடியரசு தலைவர் மற்றும் முக்கிய அமைச்சர்களை சந்தித்து பேசியுள்ளார். மேலும் கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் ஆன பசவராஜ் பொம்மை அவர்களும் இந்த அணை கட்டுதல் விவகாரத்தில் தீவிரமாக உள்ளார். இந்த நிலையில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு விடுத்திருந்தார். அந்த அறிவிப்பின்படி இன்று தமிழக பாஜக தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
இந்தப் போராட்டத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். மாட்டு வண்டியில் பயணித்து உண்ணாவிரதப் போராட்டத்தை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கி உள்ளார். மேகதாது அணை கட்டுவதை உடனடியாக கைவிட வேண்டும் என்று முன்மொழிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக இந்த மேகதாது அணை கட்டுதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து போராட்டம் நடைபெற்று வருகிறது.