மூன்று மாதங்களில் மட்டும் 50 கோடி சொத்துக்களா? எதிர்கட்சி தலைவர் பகிரங்கம்!
புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி நேற்று சமூகவலைதளத்தின் மூலமாக நிருபர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அதில் இவ்வாறு அவர் கூறினார். காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு நிலம் அபகரிப்பு, வீடுகள் அபகரிப்பு, போலி பத்திரங்கள் தயாரித்து அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்கும் வேலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
ஏற்கனவே கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் இது போன்ற வேலைகள் நடந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் ரவுடிகளையும், குண்டர் தடைச் சட்டத்தை அமல்படுத்தியும், புதுவை மக்களுக்கு பாதுகாப்பு அளித்து வந்தோம். ஆனால் தற்போது நில அபகரிப்பு வேலைகள் மிக துரிதமாக நடைபெற்று வருகின்றது. புதுவை மாநிலங்களில் அரசியல்வாதிகள் ஒத்துழைப்போடு போலி கையெழுத்திட்டு 20க்கும் மேற்பட்ட பத்திரங்களை தயாரித்து உள்ளனர்.
இதில் அரசியல்வாதிகளுக்கு வேண்டியவர்களும் கணக்கில் உள்ளார்கள். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் போலி பத்திரங்கள் தயார் செய்து 50 கோடி சொத்துக்கள் அபகரிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. போலிப் பத்திரங்கள், முத்திரைகள், தயாரித்தவர்கள் போலி கையெழுத்து போட்டவர்களின் பெயர்கள் எங்களிடம் ஆதாரத்துடன் உள்ளது. பல கொலைகளை செய்து சிறையில் அடைக்கப்பட்டவர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகளை பிடிப்பதற்கு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இந்த வழக்கை சிபிஐ எடுத்துக்கொள்ள கூறி நான் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதுவதாக உள்ளேன் என்றும் கூறினார். மேலும் தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும் பொது மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இந்த நிறுவனங்களை கண்காணிக்கும் அமைப்புகள் எதுவும் இங்கு இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் தற்போது சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இல்லை என்றும், கடந்த மூன்று மாதங்களாக வெடிகுண்டு கலாச்சாரம் புதுவையில் அதிகரித்து வருவதாகவும், இதனை கட்டுப்படுத்த காவல்துறை மிகவும் துரிதமாக செயல்பட வேண்டும் என்றும் கூறினார். கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மூன்றாம் அலை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியவில்லை. அதனால் நாம் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மீண்டும் முன்பு போல் வந்தால் புதுவை தாங்காது. அதன் காரணமாக ஊரடங்கு தளர்வுகளை முதலமைச்சர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.