செல்பி மோகத்தால், மீண்டும் ஒரு விபரீதம்! ஆனால் உயிருடன் மீண்ட நபர்!

Photo of author

By Hasini

செல்பி மோகத்தால், மீண்டும் ஒரு விபரீதம்! ஆனால் உயிருடன் மீண்ட நபர்!

சென்னையில் ஒரு இளைஞர் நேப்பியர் பாலத்தில் நின்று செல்பி எடுக்கும் போது தவறி கூவம் ஆற்றில் விழுந்து விட்டார். கூவம் ஆற்றில் விடிய விடிய தத்தளித்த நிலையில் அவர் இன்று காலை போலிஸாரால் அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். நேற்று இரவு 10 மணி அளவில் பெரியமேட்டை சேர்ந்த கார்த்திக் என்பவர் நேப்பியர் பாலத்திற்கு முன்பு நின்று தனது செல்போனில் செல்பி எடுக்க முயன்ற போது, நிலை தடுமாறி கூவம் ஆற்றில் தவறி விழுந்து விட்டார்.

அவர் விழுந்ததை அந்த நேரத்தில் யாரும் பார்க்கவில்லை, அந்த நேரத்தில் இருட்டாக இருந்ததால் யாரும் கவனிக்கவும் இல்லை. அவரது செல்போனும் நீரில் விழுந்து விட்டது. அதன் காரணமாக அவர் வேறு யாரையும் உதவிக்கு அழைக்க முடியவில்லை. பிறகு சேற்றில் சிக்கிய கார்த்திக் தட்டு தடுமாறி எழுந்து நின்றுள்ளார். காலை நேரத்தில் பாலத்திற்கு கீழ் ஒருவர் கூச்சலிடும் சத்தம் கேட்ட பொதுமக்கள், அண்ணா சதுக்கத்தில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் கயிறு மூலம் கார்த்திக்கை பத்திரமாக மீட்டு எடுத்தனர். கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கும் மேலாக அவர் ஆற்றிலேயே இருந்துள்ளார். எவ்வளவு விபத்துக்கள் நடந்தாலும் செல்பி மோகம் மட்டும் மக்களை விட்டு போக மாட்டேன் என்கிறது. இதன் மூலமாக எவ்வளவோ உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஆனால் மக்களை இதை புரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் செல்பி எடுக்கிறேன் என்ற எண்ணத்தில் விபரீதம் தெரியாமல் விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.