திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் பல திருவிழாக்கள் நடைபெறும் அதில் ஆடிபூரம் பிரம்மோற்சவ விழாவும் ஒன்று. இந்த ஆடிப் பூர பிரம்மோற்சவம் விழா சென்ற 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கும், அம்மனுக்கும், சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பின்னர் பராசக்தி உண்ணாமலை அம்மன் சன்னதி முன்னால் இருக்கின்ற தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
இந்த சூழ்நிலையில், ஆடிப்பூரம் நிறைவு விழாவை ஒட்டி அதிக பக்தர்கள் வருகை தருவார்கள் என்ற காரணத்தால், நேற்றும் நேற்று முன்தினமும் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டிருக்கிறார். அதோடு தீமிதி விழாவிற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
ஆடிப்பூரம் நிறைவு விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும் கோவில் வளாகத்தில் இருக்கின்ற சிவகங்கை தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது. பராசக்தி அம்மன் பிரகாரத்தில் உலா வந்து குளத்தில் காட்சி அளித்தார் இதனைத்தொடர்ந்து மாலை நேரத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதன் பின்னர் கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.