படகுகள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட விபத்து! 70 பேர் காணவில்லை! மீட்புப்பணிகள் துவங்கியது!
அசாம் மாநிலம் ஜோராட் மாவட்டம் பிரம்மபுத்திரா ஆற்றில் நிமடி காட் என்ற படகு குழாமில் இருந்து நேற்று மா கமலா என்ற இயந்திர படகு புறப்பட தயாரானது. அதில் 120க்கும் மேற்பட்ட பயணிகள் புறப்பட தயார் நிலையில் இருந்தனர். படகு புறப்படும் நேரம் நெருங்கிய போது அந்த இடத்திற்கு மற்றொரு படகு வந்தது. எனவே அதை நிறுத்த இடம் தருவதாக நினைத்து மா கமலா படகு நகர்ந்தது. அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு படகுகளும் மோதிக் கொண்டது.
அதன் காரணமாக மா கமலா திடீரென ஆற்றில் கவிழ்ந்து விட்டது. எனவே அதிலிருந்த 120 பேரும் ஆற்றுக்குள் விழுந்து விட்டனர். அதில் சிலர் நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தி கரை சேர்ந்தனர். பெரும்பாலானோரை காணவில்லை. அவர்களை மீட்கும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன. தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை ஆகியவை மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மீட்பு பணியில் இன்று ராணுவமும் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இன்று காலை நிலவரப்படி மட்டும் ஒரு பெண் ஆசிரியர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்தனர். மேலும் 42 பேரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். மீதி உள்ள 70 பேரின் கதி என்ன என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை.
படகில் கார்கள், ஆட்டோக்கள் போன்ற வாகனங்களும் ஏற்றப்பட்டிருந்தன. அவைகளும் ஆற்றுக்குள் விழுந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா அதிர்ச்சி தெரிவித்துள்ளார். உடனடியாக மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளதாகவும், மேலும் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனிடையே இந்த விபத்து சம்பவம் தொடர்பாக பணியில் மந்தநிலை காட்டியதன் காரணமாக 3 அதிகாரிகள் இதுவரை பனி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.