பெண்களால் மட்டுமே செய்ய முடியும்! வேலைக்கு அனுமதித்த தலீபான்கள்!
ஆப்கானிஸ்தான் அரசை தற்போது தலிபான்கள் முழுவதுமாக கைப்பற்றி விட்டதன் காரணமாக அதன் அதிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதனைத் தொடர்ந்து அந்த நாட்டை கைப்பற்றி ஒரு மாதம் முழுமையடைந்த நிலையில் தலிபான்கள் அங்கு தற்போது இடைக்கால அரசு ஒன்றையும் ஏற்படுத்தி உள்ளனர்.
மேலும் தாங்கள் அனைவரையும் உள்ளடக்கிய அரசு அமைப்பு என்றும் கூறிவந்தனர். இந்நிலையில் பெண்கள் வேலை பார்க்க அனுமதி, கல்வி உரிமை உள்ளிட்ட பல உரிமைகள் வழங்கப்படும் என்றும் கூறினார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக சமீபத்தில் மகளிர் நலத் துறை அமைச்சகம் கலைக்கப்பட்டது.
மேலும் இது அந்நாட்டு பெண்களிடையே மிகுந்த கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. எனவே அவர்கள் தலிபான்களுக்கு எதிராக தைரியமாக வீதிகளில் இறங்கியதோடு, அவர்களுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியபடியும் போராட்டங்களில் கலந்து கொண்டனர். பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும் தடை விதித்ததுடன், ஆண்கள் மட்டும் வந்தால் போதும் எனவும் முன்பே தலிபான்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மாநகராட்சி ஊழியர்கள் பணிக்கு வரவும் தலிபான்கள் தடை விதித்து இருந்தனர். எனினும் மாநகராட்சியில் பெண்களால் மட்டுமே பணி செய்ய முடியும் என்று தலிபான்களின் அமைப்பினர் கருதியதன் காரணமாக அவர்களை மட்டும் பணிக்கு அனுமதித்துள்ளனர்.